சரிந்தது இந்திய அணி பேட்டிங் * நியூசிலாந்து முதல் வெற்றி
விசாகப்பட்டினம்: நான்காவது 'டி-20' போட்டியில் பேட்டர்கள் கைவிட, இந்திய அணி 50 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஷிவம் துபே 65 ரன் எடுத்து ஆறுதல் தந்தார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா, தொடரை 3-0 என கைப்பற்றியது. நான்காவது போட்டி நேற்று விசாகப்பட்டினம் (ஆந்திரா), ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடந்தது.
'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷான் கிஷானுக்கு ஓய்வு தரப்பட்டு, அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணியில் ஜேமிசனுக்குப் பதில் பால்க்ஸ் இடம் பிடித்தார்.
சூப்பர் துவக்கம்
நியூசிலாந்து அணிக்கு கான்வே, செய்பெர்ட் ஜோடி இம்முறை சூப்பர் துவக்கம் கொடுத்தது. அர்ஷ்தீப் வீசிய முதல் ஓவரில் செய்பெர்ட் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஹர்ஷித் ராணா ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி என அடித்தார் செய்பெர்ட். பிஷ்னோய் வீசிய 6 வது ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் என கான்வே தன் பங்கிற்கு விளாசினார். செய்பெர்ட் 25 பந்தில் அரைசதம் அடிக்க, நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 8.1 ஓவரில் 100 ரன்களை எட்டியது.
திடீர் சரிவு
குல்தீப் சுழலில் சிக்கினார் கான்வே (44). அடுத்து வந்த ரச்சின் ரவிந்திராவை, 2 ரன்னில் வெளியேற்றினார் பும்ரா. மறுபக்கம் அர்ஷ்தீப் வேகத்தில் செய்பெர்ட் (62), அடித்த பந்தை ரிங்கு சிங் 'கேட்ச்' செய்து அசத்தினார். தொடர்ந்து பிலிப்ஸ் (24) அடித்த பந்தையும் பிடித்து அனுப்பினார் ரிங்கு சிங். சாப்மென் (9), பிஷ்னோய் சுழலில் சிக்கினார்.
வந்த வேகத்தில் பிஷ்னோய் ஓவரில் 4, 6 என அடித்த சான்ட்னர் (11), பாண்ட்யாவின் துல்லிய 'த்ரோவில்' ரன் அவுட்டானார். முதல் 8.1 ஒவரில் 100 ரன் எடுத்த நியூசிலாந்து, அடுத்த 8.1 ஓவரில் 65 ரன் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது. பும்ரா வீசிய 19 வது ஓவரில் மிட்செல், தலா ஒரு பவுண்டரி, சிக்சர் என அடிக்க, மொத்தம் 19 ரன் எடுக்கப்பட்டன. முடிவில் நியூசிலாந்து அணி 20 ஓவரில் 215/7 ரன் எடுத்தது. மிட்செல் (39), ஹென்றி (6) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அர்ஷ்தீப், குல்தீப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அபிஷேக் 'ஷாக்'
இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஹென்றி வீசிய முதல் பந்தில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டார் அபிஷேக். பந்தை கான்வே 'கேட்ச்' செய்ய, 'டக்' அவுட்டாகி திரும்பினார் அபிஷேக். அடுத்து வந்த சூர்யகுமார், 8 ரன் மட்டும் எடுத்து திரும்பினார்.
துபே அரைசதம்
ரிங்கு சிங், 4வது பேட்டராக களமிறங்கினார். ஹென்றி வீசிய 3வது ஓவரில் சாம்சன், 2 பவுண்டரி அடித்தார். பால்க்ஸ் வீசிய 4வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர் அடித்தார் ரிங்கு சிங். மறுபக்கம் சான்ட்னர் சுழலில் சாம்சன் (24), ஹர்திக் பாண்ட்யா (2) அவுட்டாகினர். பிலிப்ஸ் பந்தில் ரிங்கு சிங் ஒரு பவுண்டரி அடிக்க, 10 ஓவரில் இந்திய அணி 77/4 ரன் எடுத்து திணறியது.
இந்நிலையில் ரிங்கு சிங் 39 ரன்னில் அவுட்டானார்.
இஷ் சோதி வீசிய 12வது ஓவரில் துபே, 2 பவுண்டரி, 3 சிக்சர் விளாச, 29 ரன் எடுக்கப்பட்டன. 15 பந்தில் அரைசதம் கடந்த துபே, 61 ரன்னில் திரும்ப, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. ஹர்ஷித் (9), பும்ரா (4), குல்தீப் (1) நிலைக்கவில்லை. இந்திய அணி 18.4 ஓவரில் 165 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. நியூசிலாந்து இத்தொடரில் முதல் வெற்றி பெற்றது.
15 பந்து
சர்வதேச 'டி-20' அரங்கில் அதிவேக அரைசதம் விளாசிய இந்திய வீரர்கள் வரிசையில் 3வது இடம் பிடித்தார் ஷிவம் துபே. நேற்று இவர், 15 பந்தில் அரைசதம் அடித்தார். முதல் இரு இடத்தில் யுவராஜ் சிங் (12 பந்து, 2007), அபிஷேக் சர்மா (14 பந்து, 2026) உள்ளனர்.
4 'கேட்ச்'
இந்தியாவின் ரிங்கு சிங், நேற்று நான்கு 'கேட்ச்' செய்து அசத்தினார். சர்வதேச 'டி-20' அரங்கில் ஒரு போட்டியில் அதிக 'கேட்ச்' செய்த இந்திய வீரர்களில் முதலிடத்தை ரகானேயுடன் (4, 2014, எதிரணி-இங்கி.,) பகிர்ந்து கொண்டார்.
முதன் முறை
கடந்த 2022, 'டி-20' உலக கோப்பை தொடரில் இங்கிலாந்தின் பட்லர், ஹேல்ஸ் ஜோடி (அடிலெய்டு), முதல் விக்கெட்டுக்கு 170 ரன் சேர்த்தது. இதன் பின் முதன் முறையாக, இந்தியாவுக்கு எதிரான 'டி-20' போட்டியில் எதிரணியின் துவக்க ஜோடி (கான்வே-செய்பெர்ட்) முதல் விக்கெட்டுக்கு 100 ரன் எடுத்தது.
25 பந்தில்...
செய்பெர்ட் நேற்று 25 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியாவுக்கு எதிரான 'டி-20'ல் அதிவேக அரைசதம் அடித்த நியூசிலாந்து பேட்டர்களில் 3வது இடம் பெற்றார். முன்னதாக 2020, ஆக்லாந்து போட்டியில் வில்லியம்சன், ராஸ் டெய்லர் தலா 25 பந்தில் அரைசதம் அடித்துள்ளனர்.
71 ரன்
இந்தியா உடனான 'டி-20'ல் 'பவர் பிளே' ஓவரில், நியூசிலாந்து நேற்று அதிகபட்சம் 71/0 ரன் (6 ஓவர்) எடுத்தது. இதற்கு முன் 2020ல் 68/0 ரன் (ஆக்லாந்து) எடுத்ததே அதிகம்.
100 சிக்சர்
சர்வதேச 'டி-20'ல் 100 சிக்சர் என்ற மைல்கல்லை எட்டிய 3வது நியூசிலாந்து வீரர் ஆனார் பிலிப்ஸ் (87 போட்டியில் 100). முதல் இரு இடத்தில் கப்டில் (122ல் 173), முன்ரோ (65ல் 107) உள்ளனர்.
மேலும்
-
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை அதிகரிப்பு: விஜய் குற்றச்சாட்டு
-
தெருநாய் வழக்கில் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு; தீர்ப்பு ஒத்திவைப்பு
-
டிஜிட்டலுக்கு அடிமையாகும் இளம் வயதினர்: மத்திய அரசு கவலை
-
குத்துச்சண்டையில் முதலிடம் பெற்ற மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
-
எரிவாயு தகன மேடையை அகற்ற கோரிய வழக்குகள் தள்ளுபடி
-
முடிவுக்கு வந்தது நீண்ட கால போராட்டம்: புலம் பெயர்ந்த 63 பேருக்கு மறுவாழ்வு திட்டத்திற்கு உ.பி.,அமைச்சரவை ஒப்புதல்