டில்லி - புனே சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடில்லி: டில்லியில் இருந்து புனேவுக்கு சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பயணிகளை பீதியில் ஆழ்த்தியது.

நேற்றிரவு 8.40 மணிக்கு புனே விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய அந்த விமானம், 9.24 மணிக்கு தான் தரையிரங்கியது. பின்னர், வழக்கமான பகுதியில் விமானம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, இண்டிகோ விமானம் தனி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டது.

வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நடத்திய இந்தச் சோதனையில் சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருளும் கண்டறியப்படவில்லை. எனவே, இது புரளி என உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டில்லியில் இருந்து புனே சென்ற விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்தோம். பயணிகள், ஊழியர்கள் மற்றும் விமானத்தின் பாதுகாப்பிற்கு நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளிப்போம்," என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரம் டில்லியில் இருந்து மேற்கு வங்கத்தின் பாக்டோக்ராவுக்கு சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதன்பிறகு சோதனை நடத்தப்பட்டதில், அது புரளி எனத் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement