சவுக்கு சங்கரின் இடைக்கால ஜாமினை ரத்து செய்ய மறுப்பு: கூடுதல் நிபந்தனைகளை விதித்தது ஐகோர்ட்

5


சென்னை: பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது. மேலும், அவருக்கு கூடுதல் நிபந்தனைகளை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட யு டியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கக்கோரி அவரது தாய் கமலா, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சங்கருக்கு மூன்று மாதங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி கடந்த டிச.,27 ம் தேதி உத்தரவிட்டனர்.

இந்த ஜாமினை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 19ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ' நீதிமன்றத்தை ' பிளாக்மெயில்' செய்து பணிய வைக்க முடியாது,' என நீதிபதிகள் தெரிவித்தனர்.


இந்நிலையில், இந்த வழக்கு இன்று(ஜனவரி 23) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கூடுதல் நிபந்தனைகளை பிறப்பித்தனர்.


அதன்படி,
* நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்கு குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் மின்னணு மீடியாக்களில் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கக்கூடாது


*சாட்சிகளை எந்த வகையிலும் தொடர்பு கொள்ளக்கூடாது. இந்த நிபந்தனைகளை மீறினால், இடைக்கால ஜாமின் ரத்து செய்யப்படும். சவுக்கு சங்கர், நீதிமன்ற நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.


* ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் குழு அமைத்து, சவுக்கு சங்கரின் உடல்நிலையை ஆய்வு செய்வதுடன், அது குறித்த அறிக்கையை வரும் பிப்ரவரி 3ம் தேதி சீல் வைத்த கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தற்போதைய நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை ரத்து செய்ய முடியாது தெரிவித்தனர்.

Advertisement