இபிஎஸ் - தினகரன் இருவரும் பிரதமர் முன்னிலையில் கைகுலுக்கிய சுவாரஸ்யம்!

8

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் ஒரே மேடையில் இருந்த இபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். எந்த அழுத்தமும் இன்றி இந்த கூட்டணியில் அமமுக இணைந்தது என்று பின்னர் டிடிவி தினகரன் பேசினார்.

தொடர்ந்து டிடிவி தினகரன் பேசியதாவது:

இன்றைக்கு வசந்த பஞ்சமி. தை மாதம் பிறந்த பிறகு வழி பிறக்கும் என்பார்கள். அதிலும் இந்த வசந்த பஞ்சமி என்பது உலகத்தையே இயக்குகின்ற சக்தியும் ஆற்றல் பெருக தொடங்குகின்ற நாள் என்பது நமது மக்களின் நம்பிக்கை.

Tamil News
Tamil News
இந்த வசந்த பஞ்சமி அன்று தமிழகத்திற்கு வருகை புரிந்திருக்கும் பிரதமர், மக்களாட்சியை இங்கே உருவாக்க வந்து இருக்கிறார்.

தொடர்ந்து 3 முறை பிரதமராக இந்திய மக்களால் தேர்வு செய்யப்பட்டு, இந்தியாவை உலக அரங்கில் ஒரு சிறந்த இடத்திற்கு உயர்த்திக் கொண்டு இருக்கிறார் பிரதமர். தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிற மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அமமுக இந்த கூட்டணியில் வரவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

நாங்கள் முழு மனதோடு, தமிழகத்திலே தேசிய ஜனநாயக கூட்டணியை ஏற்றுக் கொண்டு (எதிர்க்கட்சி, தலைவர் அண்ணன் இபிஎஸ் என்று கூற, தொண்டர்கள் தரப்பில் ஆரவாரம்) இங்கே வந்திருக்கிறோம். நாங்கள் எல்லாம், ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்து விட்டார்கள். எம்ஜிஆர் வழிவந்தவர்கள். எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் இருந்தது என்பது உண்மைதான்.

ஆனால் தமிழகத்தின் நலன் கருதியும், அமமுக நலன்களை கருதியும் பிரதமர் அழைப்பை ஏற்று நாங்கள் எங்கள் மனதில் இருந்த கோபதாபங்களை எல்லாம் விட்டுவிட்டு வந்திருக்கிறோம்.

2021ல் நம்மால் முடியாமல் போன ஜெயலலிதாவின் ஆட்சியை உறுதியாக தமிழகத்தில் ஏற்றிட, உருவாக்கிட எந்த ஒரு மனமார்ச்சயமும் இன்றி, எந்த ஒரு தயக்கமும் இன்றி எந்த ஒரு குழப்பமும் இன்றி, எந்த ஒரு அழுத்தமும் இன்றி நாங்கள் இந்த கூட்டணியில் இணைத்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்த கூட்டணியின் வெற்றிக்காக அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும், தமிழகம் முழுவதும் அயராது பாடுபடுவான் என்கிற உறுதியை பிரதமருக்கும், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்சுக்கும் இந்த நேரத்தில் நான் சொல்லிக் கொள்கிறேன். ஒரு விஷயத்திலே எதிர்ப்பது என்றால் அதிலும் உறுதி, ஆதரிக்க வேண்டும் என்றால் அதிலும் உறுதியாக இருக்க வேண்டும் என்ற தன்மையை ஜெயலலிதா எங்களுக்கு தந்திருக்கிறார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், பங்காளிகளாக இருந்தவர்கள். நாங்கள் எங்களுக்குள் இருந்த சண்டையால் பிரிந்து இருந்தோம் என்பது உண்மை. இன்றைக்கு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு பிரதமர் தமிழகத்தில் ஒரு மக்களாட்சியை உருவாக்க வேண்டும், எம்ஜிஆர் ஆட்சியை உருவாக்க வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சியை உருவாக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் இன்றைக்கு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிற மக்கள் விரோத குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக நாங்கள் முழு மனதுடன் இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறோம் என்பதை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு தமிழகமே ஒரு கொள்ளை நாடாக, கொலை நாடாக மாறிக் கொண்டு இருக்கிறது.எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதை மருந்தின் மையமாக தமிழகம் மாறிக் கொண்டு இருக்கிறது என்பது வேதனைக்குரியது.

மாற்றுத்திறனாளிகள் கூட போராடுகிற நிலைக்கு இன்றைக்கு தமிழகம் இருக்கிறது. இங்கே மக்கள் எல்லாம் வருத்தத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலினோ மகன் உதயநிதியை முதல்வராக்க துடித்துக் கொண்டு இருக்கிறார். அந்த குடும்ப ஆட்சியை உறுதியாக நாம் முறியடிப்போம். தமிழகத்தில் மக்களாட்சியை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம்.

இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.

Advertisement