5 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு தரணும்: அமெரிக்க வங்கி மீது அதிபர் டிரம்ப் வழக்கு

4

வாஷிங்டன்: அரசியல் காரணங்களுக்காகத் தனது வங்கிக் கணக்குகளை முடக்கியதாக குற்றம் சாட்டி, ஜேபி மோர்கன் சேஸ் (JPMorgan Chase) வங்கி மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி மீது 5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.41,455 கோடி) நஷ்ட ஈடு கோரி அதிபர் டிரம்ப் வழக்குத் தொடர்ந்துள்ளார்.



கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில், பதவியில் இருந்து விலகிய பிறகு, அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் ஜேபி மோர்கன் வங்கி தனது கணக்குகளை முடக்கியதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். வங்கி நிறுவனமான ஜேபி மோர்கன் சேஸ் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் மீது 5 பில்லியன் டாலர்கள் இழப்பீடு கோரி அதிபர் டிரம்ப் வழக்கு தொடர்ந்தார்.


புளோரிடாவில் உள்ள மியாமி-டேட் கவுண்டி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். வணிகங்களை அவசரமாக வேறு இடங்களில் வங்கிக் கணக்குகளைத் திறக்க கட்டாயப்படுத்தியதாக டிரம்ப் கூறியுள்ளார். இருப்பினும், ஜே.பி.மோர்கன் நிறுவனம் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அரசியல் காரணங்களுக்காக கணக்குகளை மூடவில்லை என்று வலியுறுத்தியுள்ளது.


வழக்கு தொடர டிரம்புக்கு உரிமை உள்ளது, அதேபோல் வழக்கில் எங்களுடைய நியாயத்தை விவரிக்க எங்களுக்கும் உரிமை உள்ளது. அதிபர் டிரம்ப் தொடுத்த இந்த வழக்கு நியாயமற்றது என ஜேபி மார்கன் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement