அரசு தொகுப்பு வீடுகளில் விரிசல்; குடியேற பழங்குடிகள் அச்சம்

பந்தலுார்: பந்தலுார் அருகே பழங்குடியினர் கிராமத்தில், அரசின் தொகுப்பு வீடுகளில், குடியேறும் முன்பே விரிசல் ஏற்பட்டு உள்ளதால், அச்சமடைந்த மக்கள், குடிசையிலேயே முடங்கினர்.

நீலகிரி மாவட்டம், பந்தலுார், பரிவாரம் பழங்குடியின கிராமத்தில், மத்திய அரசின் திட்டமான, 'பிரதம மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் - பி.எம்., ஜன்மம்' திட்டத்தின் கீழ், 5.73 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டும் திட்டம் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், பரிவாரம் பழங்குடியின கிராமம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், 20 வீடுகள் கட்டும் பணி, 2023ம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது வரை வீடுகள் கட்டும் பணி முழுமை அடையாமல் உள்ளது. பணி நிறைவு பெற்ற வீடுகளின் சுவர்கள், விரிசல் அடைந்து, சிமென்ட் பூச்சு விழுந்து வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்து, தற்போதும் பாதுகாப்பற்ற குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். மூன்று ஆண்டுகளாக வீடுகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டும், தரமற்ற பணி குறித்து அதிகாரிகளிடம், மக்கள் முறையிட்டும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.

கிராமத்தை சேர்ந்த சுகன்யா என்பவர் கூறுகையில், ''ஒப்பந்ததாரர்கள், விருப்பம் போல பணிகளை மேற்கொள்வதால், எங்கள் கிராமத்தில் வீடுகள் கட்டும் பணி தரமற்ற முறையில் உள்ளதுடன், நடைபாதை, குடிநீர், கழிப்பறை பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. கலெக்டரிடம் மனுவாக அளித்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை,'' என்றார்.

ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ''உடனடி ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

Advertisement