கேரளாவில் தே.ஜ., கூட்டணியில் இணைந்தது 'டுவென்டி 20' கட்சி

கொச்சி: கேரளாவில், அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, 'கைடெக்ஸ்' குழுமத்தால் துவங்கப்பட்ட, 'டுவென்டி 20' கட்சி, பா.ஜ., தலைமையிலான தே சிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது.

கேரளாவைச் சேர்ந்த, 'கைடெக்ஸ்' குழுமத்தின் தலைவர் சாபு எம்.ஜேக்கப், டுவென்டி 20 என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார்.

இங்கு, 2015ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கிழக்கம்பலம் பஞ்சாயத்தை கைப்பற்றி தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது டுவென்டி 20 கட்சி.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்று, கிழக்கம்பலம் பஞ்சாயத்தை அக்கட்சி தக்க வைத்தது.

இந்த பஞ்சாயத்தில், டுவென்டி 20 கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில், காங்., - பா.ஜ., - மார்க்.கம்யூ., ஆகியவை பல வார்டுகளில் பொதுவான சுயேச்சை வேட்பாளர்களை களமிறக்கின. எனினும், டுவென்டி 20 கட்சி அபார வெற்றி பெற்றது.

கிழக்கம்பலம் பஞ்சாயத்தை தவிர, அக்கட்சி தற்போது மற்றொரு பஞ்சாயத்தையும் ஆட்சி செய்கிறது.

எந்த கட்சியுடனும் கூட்டு சேராமல் இருந்த டுவென்டி 20 கட்சி, கேரள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் தற்போது இணைந்துள்ளது.

கேரள பா.ஜ., தலைவர் ராஜிவ் சந்திரசேகர், டுவென்டி 20 கட்சி தலைவர் சாபு எம்.ஜேக்கப் ஆகியோர் இடையே நடந்த பேச்சில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. டுவென்டி 20 கட்சியின் வரவு, எர்ணாகுளத்தில் பா.ஜ.,வின் வெற்றிக்கு உதவும் என, கூறப்படுகிறது.

இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை சாபு எம்.ஜேக்கப் சந்தித்து பேசினார்.

Advertisement