ஆட்டோமொபைல் உதிரிபாக கடையில் தீ விபத்து
கோவை: கோவை, காந்திபுரம், ராம்நகரில் ஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனையகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர், விமானப் படையினர் இணைந்து 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். துரிதமாக செயல்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
ராம்நகர், ராஜரத்தினம் வீதியில் தனியார் ஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனையகம் (மாதேஸ்வரி ஆட்டோமொபைல்ஸ்) உள்ளது. இங்கு நேற்று 4:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இக்கட்டடத்தின் மூன்று தளங்களிலும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. பிளாஸ்டிக் உதிரிபாகங்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், வாகனங்களுக்குத் தேவையான ஆயில் கேன்களில் தீப் பற்றி, மூன்று தளங்களும் தீப்பிடித்தன. அருகில் செல்ல முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இருந்தது. தீ எரிந்ததால் உருவான கரும்புகை 5 கி.மீ., தூரம் வரை தெரிந்தது.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை தலைமையில் தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து, தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார், அருகிலுள்ள கட்டடங்களில் இருந்தவர்களை பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தினர். பக்கத்து கட்டடங்களில் இருந்து, சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. சுற்றுப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தீ கொழுந்து விட்டு எரிந்ததால், கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. விமானநிலையத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட, நுரையை உருவாக்கி தீயைக் கட்டுப்படுத்தும் வாகனமும், தீயணைப்புத் துறையினரின் 'ஸ்கைலிப்ட்' வாகனமும் இணைந்த பிறகே, தீ கட்டுக்குள் வந்தது. விமானப்படை, கடற்படையைச் சேர்ந்த தீயணைப்புப் பிரிவினரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
சுமார் 3 மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இவ்விபத்தில் கட்டடம் முழுமையாக எரிந்தது. கட்டடத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டூவீலர் முழுமையாக எரிந்தது. மற்றொரு வாகனம் சேதமடைந்தது.
கலெக்டர் பவன்குமார், போலீஸ் கமிஷனர் கண்ணன், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், ஆகியோர் வந்திருந்து தீயணைப்புப் பணிகளைப் பார்வையிட்டனர். எம்.பி. ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
கலெக்டர் பவன்குமார் கூறியதாவது:
தீ விபத்துக் குறித்து அறிந்ததும் தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் உடனடியாக வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மாநகராட்சி பணியாளர்களும் உதவி செய்தனர். விமானப்படை, கடற்படை, விமான நிலைய தீயணைப்பு வாகனங்கள், கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அனைவரின் கூட்டுமுயற்சியால் தீ கட்டுப்படுத்தப்பட்டது. உயிர் சேதம் இல்லை. விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணைக்குப் பிறகு தெரியவரும், என்றார்.
மேலும்
-
கிரீன்லாந்தில் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு; கனடா எதிர்ப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு
-
'தொண்டர்களை தினமலர் படிக்க வைத்தேன்'
-
பெண் குழந்தைகள், கல்வி தினம்
-
இரண்டாவது விண்வெளி வீரர்
-
செங்கல் கட்டு வேலையில் உயர அடிப்படையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
-
படுக்கை அறை வடிவமைப்பில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்!