ஜல்லிக்கட்டு போட்டிக்கு புதிய விதிமுறைகள்

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதில் சில சிரமங்கள் உள்ளன. இவை, அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. அவற்றை பரிசீலித்து, காளைகளுக்கு எவ்வித துன்பமும் நேராத வகையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இடையூறு இல்லாத வகையில், சில தளர்வுகள் வழங்கி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், உள்ளூர் காளைகளும், வீரர்களும், போட்டிகளில் பங்கேற்பதை உறுதி செய்ய, இணையதள பதிவு முறையை மாற்றி, அந்தந்த மாவட்ட அளவில் முடிவு செய்து கொள்ள வழிவகை செய்யப்படும்.

போட்டிகளின் போது இறக்க நேரிடும் மாடுபிடி வீரர்களுக்கு, உரிய நிவாரணம் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. எனவே, மாடுபிடி வீரர்களுக்கு ஆயுள் காப்பீடு கட்டாயம் என்ற விதி தளர்த்தப்படும். இதுவரை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவோரிடம், முத்திரைத் தாளில் பெறப்பட்டு வந்த உறுதிமொழி பத்திர நடைமுறை ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement