அமெரிக்காவை புரட்டிப்போடும் பனிப்புயல்; 8,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

7


வாஷிங்டன்: அமெரிக்காவில் வீசி வரும் பனிப்புயல் காரணமாக 8,000க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 25 மற்றும் 26ம் தேதிகளுக்கான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ அறிவித்துள்ளது.

அமெரிக்காவை மிகக்கடுமையான பனிப்புயல் தாக்க இருப்பதாக அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெக்சாஸ் முதல் வட கரோலினா வரையில் கனமழை மற்றும் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 14 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது. இதனால், 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

டெக்சாஸின் சில பகுதிகளில் உறைபனியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியுள்ளது. ஓக்லஹோமா நகரில் பனிப்பொழிவு தென்படுகிறது. இந்த சமயத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்காவுக்கு இயக்கப்பட இருந்த விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. இன்று 3,400 விமானங்களும், நாளை 5,000 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

நாளை மற்றும் நாளை மறுநாள் நியூயார்க் மற்றும் நியூவார்க் நகரங்களுக்கு இயக்கப்பட இருந்த ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement