ககன்யான் திட்டம் தாமதம் ஆகாது; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி

1


கோவை: கடந்த வாரம் பிஎஸ்எல்வி ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்திருந்தாலும், ககன்யான் திட்டம் தாமதம் ஆகாது என இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி அளித்துள்ளார்.



கோவையில் நிருபர்களிடம் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது: விண்வெளி திட்டத்தில் பிரதமர் மோடி தலைமையில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். நம்மிடம் பெரிய, பெரிய திட்டம் இருக்கிறது. விண்வெளி நிலையம் அமைக்கும் திட்டம் இருக்கிறது. வீரர்களை நிலாவுக்கு அனுப்பும் திட்டங்கள் உள்ளது. நல்ல நட்பு உள்ள வெளிநாடுகளுடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம்.


60 நாடுகளுடன் நமக்கு தொடர்பு இருக்கிறது. மாணவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை, ஒன்று நன்றாக படிக்க வேண்டும். இரண்டாவது புத்தகத்தை மட்டும் படிப்பதாக இருக்க கூடாது. மூன்றாவது நல்லவர்களாக வளர வேண்டும்.

நிறைய செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் குறித்து வேலை செய்து வருகிறோம். பிரதமர் மோடியிடம் பேசிய பிறகு அறிவிப்பு வெளியாகும்.


கடந்த வாரம் பிஎஸ்எல்வி ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்திருந்தாலும், ககன்யான் திட்டம் தாமதம் ஆகாது. பிஎஸ்எல்வி ராக்கெட் திட்டம் தோல்விக்கான காரணத்தை நாங்கள் தற்போது ஆய்வு செய்து வருகிறோம். இவை இரண்டும் தனித்தனி திட்டங்கள், மேலும் பிஎஸ்எல்வி ராக்கெட் திட்டத்தின் தோல்வி, நமது எதிர்கால திட்டங்களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு நாராயணன் கூறினார்.

Advertisement