இஸ்ரோவின் அடுத்த மெகா திட்டம்; விண்வெளி நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
புதுடில்லி: இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் அமைக்கும் பணியில் இஸ்ரோ தீவிரமாக இறங்கியுள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம், உலகின் 5 முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் சார்பில் நிர்வகிக்கப்படுகிறது. அது தவிர, சீனா சார்பில் ஒரு சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையமும் உள்ளது. இந்தியா சார்பிலும் விண்வெளி ஆய்வு மையம் அமைக்க ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
2035ம் ஆண்டிற்குள் குறைந்தபட்சம் ஐந்து ஆய்வு மையங்களை விண்வெளியில் நிலை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் விண்வெளி நிலையத்தை 2028க்குள் நிறுவ இஸ்ரோ திட்டம் செயல்படுத்தியுள்ளது. பாரதிய அந்தரிக்ஷ் என்ற அந்த நிலையத்தை அமைக்கும் பணி, இஸ்ரோ சார்பில் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான இரண்டு நிலையங்களை உருவாக்குவதற்கான அனுமதியை தனியார் நிறுவனங்களுக்கு, இஸ்ரோ அனுமதி வழங்கியுள்ளது.இவ்வாறு உருவாக்கப்படும் நிலையங்கள், எதிர்காலத்தில் விண்வெளி நிலையம் அமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வர பேருதவியாக இருக்கும்.
விண்வெளி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் வீரர்கள், முதலில் இந்த விண்வெளி நிலையங்களில் தான் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்வர்.
விண்வெளியில் இந்தியாவின் நிரந்தர முகவரியாக, பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விண்வெளியில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கான ஆய்வகமாகவும், எதிர்கால விண்வெளி ஆய்வு திட்டங்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான இடமாகவும் இந்த நிலையம் இருக்கும்.
தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதியின்படி, 8 மீட்டர் உயரமும், 3.8 மீட்டர் விட்டமும் கொண்ட ஒரு மாதிரி நிலையத்தை, அதிக வலு கொண்ட அலுமினியம் அலாய் கொண்டு தனியார் நிறுவனத்தினர் உருவாக்குவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி சிறக்க வாழ்த்துக்கள்