திருடப்பட்ட சோழர் கால சிலைகள்; இந்தியாவிடம் ஒப்படைக்கிறது அமெரிக்கா

3


வாஷிங்டன்: தமிழகத்தில் இருந்து திருடிச் செல்லப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த 3 வெண்கல சுவாமி சிலைகளை, மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.


தமிழகத்தில் சோழர் காலம் மற்றும் விஜயநகர காலத்தைச் சேர்ந்த சிலைகள், திருடிச் செல்லப்பட்டு, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் ஆசிய கலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த வெண்கல சிலைகள் தங்கள் நாட்டில் இருந்து திருடி வரப்பட்டதாக இந்தியா குற்றம்சாட்டியிருந்தது.

இதையடுத்து, பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்தின் புகைப்பட ஆவணக் காப்பகத்தின் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 1956 முதல் 1959க்குள் தமிழகக் கோவில்களில் இந்தச் சிலைகள் இருந்ததை, புகைப்பட ஆதாரங்கள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, அந்த சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க ஸ்மித்சோனியன் ஆசிய கலை அருங்காட்சியகம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள டோரிஸ் வீனர் கேலரியிடமிருந்து சிவ நடராஜர் சிலையை அருங்காட்சியகம் வாங்கியது. ஆனால், அவர்கள் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்தது, தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

ஒப்படைக்கப்பட இருக்கும் சிலைகளின் விபரம்




சிவ நடராஜர் சிலை (சோழர் காலம் கி.பி. 990): தஞ்சையின் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் அமைந்துள்ள ஸ்ரீ பவ ஔஷதீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்டது.

சோமாஸ்கந்தர் சிலை (சோழர் காலம் 12ம் நூற்றாண்டு): திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா ஆலத்தூர் கிராமத்தில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டது.

பரவை நாச்சியாருடன் சுந்தரமூர்த்தி நாயனார் இருக்கும் சிலை ; கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரத்தில் உள்ள சிவன் கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்டது.

இதில் சிவ நடராஜர் சிலை அருங்காட்சியகத்தில் நீண்ட காலம் வைப்பதற்கு இந்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்த சிலை, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இமயமலை கலைப்பிரிவில் அருங்காட்சியக கண்காட்சியில் சேர்க்கப்பட இருக்கிறது.

Advertisement