தெளிவான அரசியல் நிலைப்பாடு கொண்டவர் ராகுல்: சொல்கிறார் சசி தரூர்

16


திருவனந்தபுரம்: '' நான் காங்கிரசில் தான் இருக்கிறேன். கேரளாவில் காங்கிரஸ் வெற்றிக்கு பணியாற்றுவேன். உறுதியான அரசியல் நிலைப்பாடு கொண்ட தலைவராக ராகுல் உள்ளார்,'' என அக்கட்சி எம்பி சசி தரூர் கூறியுள்ளார்.


திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்பி சசி தரூர்,கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி மற்றும் பாஜவின் செயல்பாடுகளை பாராட்டி வந்ததால் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியது. ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சி மற்றும் பார்லிமென்ட் கூட்டத்தொடர் குறித்து சோனியா வீட்டில் நடந்த கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்ததால், பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.


நேற்று டில்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் எம்பி ராகுலை சசி தரூர் சந்தித்து பேசினார். இதன் பிறகு, அவர், ஒரு மித்த கருத்துடன் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம்,' என தெரிவித்து இருந்தார்.


இந்நிலையில், இன்று அவர் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நான் காங்கிரசில் தான் இருக்கிறேன். எங்கும் சென்று விடவில்லை. கேரள பிரசார குழுவில் இருக்கிறேன். காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்காக பணியாற்றுவேன். கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தலைமை ஏற்று பிரசாரம் செய்வேன்.தெளிவான அரசியல் நிலைப்பாடு கொண்ட தலைவராக ராகுல் உள்ளார். மதவாதத்தை எதிர்க்கும் தலைவராக திகழ்கிறார்.


கட்சி எடுத்திருக்கும் நிலைப்பாட்டிற்கு மாறாக நான் எந்த கருத்தையும் சொன்னது இல்லை. சில நேரங்களில் நான் எனது தனிப்பட்ட கருத்துகளை கூறியிருப்பேன். வளர்ச்சி சார்ந்த விஷயத்தில் நான் பார்த்த சில நல்ல விஷயங்களை எடுத்து கூறியிருப்பேன்.அரசியல் பற்றி பேச நான் விரும்பவில்லை. 2009 முதல் நாட்டிற்காக பேச விரும்புகிறேன். கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கு மாறாக பேசுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.


காங்கிரசில் தொடர்ந்து நீடிக்கிறேன் என ஒவ்வொரு முறையும் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? என்னிடம் மட்டும் இந்தக் கேள்விகளை ஏன் கேட்க வேண்டும். காங்கிரசில் உறுதியுடன் நீடிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement