திருப்பதி லட்டுக்கு கலப்பட நெய் பயன்படுத்தி ரூ.250 கோடி ஊழல்; சிபிஐ குற்றப்பத்திரிகை

10

புதுடில்லி: திருப்பதி லட்டுக்கு கலப்பட நெய் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்ட
ஊழலில், தேவஸ்தான அதிகாரிகள், பால் பண்ணை நிபுணர்கள் உட்பட 36 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் ரூ.250 கோடி ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ஆந்திராவின் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் வழங்கும் லட்டு தயாரிப்பில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. ஆய்விலும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக சிபிஐ தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடந்து வந்தது. இந்த குழு நெல்லூர் நீதிமன்றத்தில் 223 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. தேவஸ்தான அதிகாரிகள் 9 பேர், 5 பால் பண்ணை நிபுணர்கள் உட்பட 36 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

* லட்டு தயாரிப்பதற்கு பாமாயில், எண்ணெய் ஆகியவை கலக்கப்பட்டு உள்ளது. மணல் மற்றும் நிறத்திற்காக அசிட்டிக், லாக்டிக் அமிலம் மற்றும் செயற்கை திரவியங்கள் கலப்படம் செய்யப்பட்டு உள்ளது.

* உ.பி, மஹாராஷ்டிரா, திருப்பதியில் உள்ள நிறுவனங்களில் இருந்து ஒட்டுமொத்தமாக 6 ஆண்டுகளில் 68 லட்சம் கிலோ கலப்பட நெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை 250 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது.


* உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளும் லஞ்சம் பெற்றுக் கொண்டு கலப்பட நெய்க்கு தரச் சான்று வழங்கப்பட்டு இருக்கிறது.


* விஜயவாடாவைச் சேர்ந்த பாரத் பாய் தாக்கூர் மூலம் ரூ.12.55 கோடி ரொக்கமும், சென்னையில் மதரம் தேவாசி மூலம் ரூ.7.31 கோடியும் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. திருப்பதி லட்டு தயாரிப்பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.

Advertisement