திமுகவும், அதிமுகவும் வேறு வேறு கட்சியா; கேட்கிறார் சீமான்

20

சென்னை: 'வரும் சட்டசபை தேர்தலில் ஒரே கொள்கை கொண்ட கூட்டத்தினரிடையே தான் போட்டி. உலகத்திலேயே எனக்கு யாருமே போட்டி கிடையாது,' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஆட்சி முறை மாறுமா?





அவர் பேசியதாவது; புதிய ஆட்சியமைந்தால் சாலைகள், அரசு மருத்துவமனைகளின் தரங்களை உயர்த்தி விடுவார்களா?, தடையில்லா மின்சாரத்தை கொடுத்து விடுவீர்களா? இவங்க ஆட்சியில் பஸ்களில் பெண்களுக்கு இலவசம், அவங்க வந்தால் ஆண்களுக்கு இலவசம். பஸ்ஸை சும்மா ஓட்டுவீங்க. ஓட்டுநர், டிரைவர்களுக்கு சம்பளத்தை சொத்தை வித்து கொடுப்பீர்களா?, இல்லாவிட்டால் எங்களிடம் இருந்து எடுத்துக் கொடுப்பீர்களா?

ஆட்சி மாறுவது முக்கியமில்லை. ஆட்சி முறை மாறுமா? ஊழல், லஞ்சமற்ற நேர்மையான நிர்வாகம் வருமா? என்பது தான் இங்கு கேள்வி. 28 சதவீதம் மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்கப் போறாங்க. பல கோடி பச்சிளம் குழந்தைகள் பசியோடு படுக்குது. கொடுமையை துடைக்க வழியில்லை. தாலிக்கு தங்கம் கொடுப்பாங்க, மது குடிக்க வைத்து அதே தாலியை அவங்களே அவிழ்ப்பாங்க.

போட்டிக்கு ஆளே இல்ல





இலவசமான ரேஷன் அரிசியை எந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வீட்டில் வாங்கி சமைக்கிறார்கள்? ஏனெனில் அதில் தரமில்லை. அந்நிய முதலீடுகளை கொண்டு வருகிறார்கள். அது மாதிரி நிர்வாகம் கொண்டு வருகிறார்களா? வரும் சட்டசபை தேர்தலில் ஒரே கொள்கை கொண்ட கூட்டத்தினரிடையே போட்டி. எனக்கு யாருமே போட்டி கிடையாது. என்னுடைய கோட்பாட்டுக்கு உலகத்தில் அல்லது இந்திய துணைக் கண்டத்தில் ஒரு போட்டியை சொல்லுங்க. பரந்தூர் விமான நிலையம், சென்னையில் புதிய துறைமுகம், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டான்ட் அமைப்பது எல்லாம் பேராசை. எனக்கு யாரும் போட்டியில் இல்லை. ஒருவர் இருமொழிக் கொள்கை என்பார். மற்றொருவருக்கு கொள்கையே தெரியாது.

அரசியல் வியாபாரம்





மக்களுக்குள் ஒரு அறச்சீற்றம் இல்லை. கோபப்பட்டு எழுகிறார்கள். தேர்தல் சமயத்தில் தணிந்து விடுகிறது. கூட்டணி மாறி மாறி போகிறவர்களுக்கு சீட்டும், நோட்டும் அதிகமாக இருக்க வேண்டும். அதிமுகவும், திமுகவும் வேறு வேறு கட்சி என்று சொல்ல முடியுமா? திமுகவில் அமைச்சர்களாக இருப்பவர்கள் முன்னாள் அதிமுக நிர்வாகிகள் தான். திமுகவுக்கு மாற்று அதிமுக என்று ஏதேனும் ஒன்றை சொல்ல முடியுமா? கடன் வளர்ச்சி மட்டும் தான் இந்த ஆட்சிகளில் இருக்கிறது. எதன் அடிப்படையில் கூட்டணி சேருகிறீர்கள். அரசியல் புரட்சி என்று துவங்கி, அரசியல் வியாபாரம் ஆகி விடுகிறது.

மது ஒழிப்பு மாநாடு நடத்திய திருமாவளவன், திமுகவோடு கூட்டணியில் இருக்கிறார். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுபவர்களுடன் தான் கூட்டணி என்று ஏன் கூறவில்லை. கோரிக்கையை நிறைவேற்றாதவரோடு கூட்டணி அமைத்து வலிமையை சேர்த்தால், எப்படி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்கள். தனியாக நின்று மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை நாதக பெற்றுள்ளது. இது வெற்றியா? இல்லையா? தேர்தல் வெற்றிதான் வெற்றி என்றால் கஷ்டம்.

என்னுடைய கொள்கையை எதிர்த்து தான் இங்கு நிறைய கட்சிகள் உள்ளன. கொள்கையை ஏற்று ஒரு கட்சியும் இல்லை. என் மொழி தமிழ், என் இனம் தமிழன். அப்படியிருக்கும் போது என்னை ஏன் திராவிடன் என்று சொல்கிறாய். மாறுதலை விரும்புபவன் காத்திருந்து தான் ஆக வேண்டும். பேயை (திமுக) விரட்டி விட்டு பிசாசை (அதிமுக) உட்கார வைக்கிறீங்க. பாஜ எதிர்ப்பு பற்றி எல்லாம் காலம் காலமாக பேசுவார்கள். 5 ஆண்டுகால பாஜ ஆட்சியை நிலைக்க வைத்து, நாடெங்கும் பாஜ ஆட்சி பரவ காரணமாக இருந்தவர் கருணாநிதி என்று அவரது நினைவு நாணயத்தை வெளியிட்ட ராஜ்நாத்சிங் பேசியுள்ளார்.

தமிழகத்தில் பாஜ வரக் கூடாது என்று சொல்லும் திமுக, காங்கிரஸை உள்ளே வரலாமா? பாஜவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே உள்ள மாறுபாட்டை திமுகவினரால் சொல்ல முடியுமா?. சீமான் கேட்ட சின்னத்தை கொடுக்கக் கூடாது. கேட்ட சின்னம் விஜய்க்கு கிடைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement