டிராக்டர் மீது அரசு பஸ் மோதி விபத்து; பெண் தொழிலாளி இறப்பு

வால்பாறை: வால்பாறையில், தனியார் எஸ்டேட் டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில், சிகிச்சை பலனின்றி பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், ேஷக்கல்முடி எஸ்டேட் பகுதிக்கு நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இதே போல் உருளிக்கல் எஸ்டேட் பெரியார் நகரிலிருந்து வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதிக்கு தேயிலை பறிக்கும் பணிக்காக, 13 தொழிலாளர்கள் டிராக்டரில் அழைத்து செல்லப்பட்டனர்.

அப்போது, எதிரே அதிவேகமாக வந்த அரசு பஸ், டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஏழு தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில், வால்பாறை, பொள்ளாச்சி, கோவை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த பெண் தொழிலாளி விக்டோரியா,50, சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து ேஷக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

விதிமீறலால் விபத்து வால்பாறையில் உள்ள பெரும்பாலான தனியார் எஸ்டேட்களில், காலை, மாலை நேரத்தில் டிராக்டர், மினிலாரிகளில், தொழிலாளர்களை பணிக்கு அழைத்து செல்கின்றன. சரக்கு வாகனங்களில் தொழிலாளர்களை அழைத்து செல்வதால் ஏற்படும் அபாயம் குறித்து, எஸ்டேட் நிர்வாகத்திற்கு தெரிந்தும், தொடர்ந்து இதையே கடைபிடித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி ஆர்.டி.ஓ., நேரில் விசாரணை செய்து, தொழிலாளர்களை சரக்கு வாகனங்களில் பணிக்கு அழைத்து செல்வதை தடுக்க வேண்டும். சமவெளி பகுதியில் தொழிலாளர்களை வேனில் அழைத்து செல்வதை போன்று, எஸ்டேட் தொழிலாளர்களுக்கு அந்த எஸ்டேட் நிர்வாகம் சார்பில் வேன் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Advertisement