அமெரிக்க மாணவரின் தமிழ் ஆர்வம்: ஆசிரியர்கள் ஆச்சரியம்

1

மானாமதுரை: அமெரிக்காவை சேர்ந்த மாணவர் வெள்ளிக்குறிச்சி கிராமத்திற்கு விடுமுறையில் வந்த போது தமிழ் மொழி மீதுள்ள ஆர்வத்தால் அரசு பள்ளிக்கு சென்று தமிழ் கற்பது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


சிவகங்கை மாவட்டம் வெள்ளிக்குறிச்சியை பூர்வீகமாக கொண்டவர் செல்வக்குமார். 30 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறி அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அமெரிக்காவில் வசித்தாலும் தமிழை நேசிக்கும் அடையாளமாக நான்கு மகன்களுக்கும் தமிழ் பெயர்களான மெல்வின் ராஜ்குமார், முருகன், சரவணன், கோபி என வைத்துள்ளார். அமெரிக்க பள்ளியில் படித்தாலும், வகுப்பறையில் இவர்களின் பெயர் மூலம் தமிழ் மொழி ஒலிக்கிறது.


செல்வக்குமாரின் மூத்த மகன் மெல்வின் ராஜ்குமார். தற்போது அமெரிக்காவில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். 2 மாத விடுமுறைக்காக தன் தந்தையின் சொந்த ஊரான வெள்ளிக்குறிச்சி கிராமத்திற்கு வந்துள்ளார். விடுமுறை என்றதும் விளையாட்டு, சுற்றுலா, பொழுதுபோக்கு என நேரத்தை கழிக்காமல், தமிழ் மொழி மீதுள்ள ஆர்வத்தால் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கில் வெள்ளிக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தினமும் சென்று வருவது இங்குள்ள அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


மெல்வின் ராஜ்குமார் தினந்தோறும் நேரம் தவறாமல் பள்ளிக்கு சென்று தமிழ் எழுத்துகள், சொற்கள், வாசிப்பு, உச்சரிப்பு என அடிப்படையிலிருந்து தமிழை ஆர்வத்துடன் கற்று வருகிறார். பள்ளியில் உள்ள மாணவர்களுடன் மிகவும் நட்பாகவும் அன்பாகவும் பழகி வருகிறார். ஒரு மாதமாக தொடர்ந்து பள்ளிக்கு செல்லும் மெல்வின் ராஜ்குமார் தற்போது பல தமிழ் வார்த்தைகளை அழகாகவும் தெளிவாகவும் பேச தொடங்கியுள்ளார். அமெரிக்காவில் இருந்து வந்த மெல்வின் ராஜ்குமாருடன் பேசுவதன் மூலம் இங்கு படிக்கும் மாணவர்களும் ஆங்கிலத்தை எளிதாக கற்றுக் கொள்கிறார்கள் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement