கையகப்படுத்தப்பட்ட நிலம் விவகாரம்: மேற்கு வங்க அரசுக்கு கோல்கட்டா உயர்நீதிமன்றம் உத்தரவு

கோல்கட்டா: இந்திய-வங்கதேச எல்லையில் முள்வேலி அமைப்பதற்காக, ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மார்ச் 31,க்குள் எல்லைப் பாதுகாப்புப் படையிடம் (பிஎஸ்எப்) ஒப்படைக்க மேற்கு வங்க அரசுக்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்லைப் பகுதிகளில் நிலவும் கடத்தல் மற்றும் ஊடுருவலைத் தடுக்க வேலி அமைப்பது அவசியம் என ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டாக்டர் சுப்ரதா சாஹா தொடர்ந்த வழக்கு கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு இன்று கோல்கட்ட நீதிமன்ற நீதிபதிகள் சுஜாய் பால் மற்றும் பார்த்த சாரதி சென் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல் பணிகள் அல்லது வாக்காளர் பட்டியல் திருத்தம் போன்ற காரணங்களைக் கூறி தேசிய பாதுகாப்பு சார்ந்த பணிகளைத் தாமதப்படுத்த முடியாது.


எல்லையோரமுள்ள ஒன்பது மாவட்டங்களில் நிலுவையில் உள்ள முள்வேலிப் பணிகளுக்காக இந்த நிலப்பரிமாற்றம் உடனடியாக நடைபெற வேண்டும்.மத்திய அரசால் நிதி வழங்கப்பட்டு, ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை எவ்வித தாமதமும் இன்றி ஒப்படைக்க வேண்டும்.


நிலம் கையகப்படுத்தும் பணி இன்னும் முடிவடையாத இடங்களில், அது குறித்த நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பிக்கவும், மார்ச் மாதற்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் அளித்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

Advertisement