ராமதாசை கொண்டாடியவர்கள் எனக்கு துணை நிற்கவில்லை திருமாவளவன் ஆதங்கம்

2

சென்னை: ''ராமதாசை கொண்டாடிய ஈ.வெ.ரா.,வாதிகளும், மார்க்சியவாதிகளும், எனக்கு ஆதரவாக கூட நிற்கவில்லை,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், திருமாவளவன் பேசியதாவது:

பா.ம.க., நிறுவனர் ராமதாசும் நானும் சேர்ந்து, தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை நடத்தினோம். தேர்தல் காரணத்தால், அவரும் நானும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

பிரிந்தபோது தமிழ் உணர்வாளர்கள், தமிழறிஞர்கள் எல்லாரும், ராமதாஸ் பின்னால் போனார்கள். யாரும் திருமாவளவன் பின்னால் வரவில்லை. என்னுடன் பயணிப்பதற்கு எது தடுத்தது?

ராமதாஸ், இயக்க தலைவராக வந்தபோது, ஈ.வெ.ரா.,வாதிகளும், மார்க்சியவாதிகளும் தோளில் துாக்கி கொண்டாடினர்.

'தி.மு.க.,வுக்கும் அ.தி.மு.க.,வுக்கும் மாற்றாக, ஒரு தலைவர் வந்துவிட்டார். ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போகிறார். இனி, தி.மு.க., - அ.தி.மு.க., வேண்டாம்' என, ராமதாசை தலையில் துாக்கி வைத்துக் கொண்டாடினர்.

ஆனால், திருமாவளவன் வந்தபோது, யாரும் ஆதரவும் ஊக்கமும் அளிக்கவில்லை; எளிய மக்களை அமைப்பாக மாற்றும் எனது கடினமான முயற்சிக்கும் போராட்டத்திற்கும் துணை நிற்கவும் இல்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான், முட்டி மோதி, சொந்த கால், கைகளை ஊன்றி, அரசியலில் இப்போது இருக்கும் இடத்துக்கு வந்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement