வெறும் காற்றில் நாய் காப்பகங்களை கட்டுவதா? தமிழகம் உட்பட பல மாநிலங்கள் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

9

தெருநாய்கள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளின் வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. ஒரு வாரத்திற்குள், அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான மனுக்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.


தலைநகர் டில்லியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வந்த நிலையில், அது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.


கடந்த ஆண்டு ஆகஸ்ட் துவக்கத்தில், டில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் இருந்து தெருநாய்களை அப்புறப்படுத்தும்படி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு எதிராக நாய் பிரியர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த விவகாரத்தை நாடு முழுதும் விரிவுபடுத்திய உச்ச நீதிமன்றம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை வழக்கில் சேர்த்தது.


கடந்த ஆண்டு நவ., 7ல் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தெருநாய்கள் தொல்லை, அவற்றை கட்டுப்படுத்த அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


மேலும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில், தெருநாய்கள் வராமல் தடுக்க வேலி அமைக்கும்படியும் அறிவுறுத்தியது. இவ்வழக்கு, நேற்றும் விசாரணைக்கு வந்தது.


நாய் பிரியர்கள், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், விலங்குநல ஆர்வலர்கள், மத்திய - மாநில அரசுகள் என அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு விசாரித்தது.


* முன்னதாக, நாய்க்கடி விவகாரம் குறித்து ஆலோசனை தெரிவிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கவுவ் அகர்வால், “ஆந்திராவில் மட்டுமே தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு நாள்தோறும், 1,619 நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்படுகின்றன. இதற்காக ஆந்திரா முழுதும், 39 கருத்தடை மையங்கள் செயல்பட்டு வருகின்றன,” என தெரிவித்தார்.


* தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், 'தெருநாய்களுக்கு காப்பகங்களை உருவாக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஆண்டுக்கு 35,000 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. 'தலா, 120 நாய்களை பராமரிக்கும் வகையில், 72 நாய் காப்பகங்கள் மாநிலம் முழுதும் அமைக்க 22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.


'மாநிலம் முழுதும் ஒரு நாய் காப்பகம் கூட இல்லையா?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் 'தமிழகத்தில் விலங்குகள் காப்பகங்கள் உள்ளன. ஆனால், அவற்றின் திறன் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. மேலும், இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது' என கூறினார்.


இதைத் தொடர்ந்து நீதிபதி கள் முன்வைத்த கருத்து:




* தெருநாய்களை பிடித்து கருத்தடை ஊசி செலுத்துவது போன்ற நடவடிக்கைகளை, மாநில அரசுகள் முறையாக மேற்கொள்ளவில்லை.


* நாய்களுக்கான காப்பகங்கள் அமைப்பது, கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து நாய்களை அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வெறும் காற்றிலேயே கட்டடம் கட்டப்பட்டுள்ளது



* நாய்க்கடி தொடர்பாக, அசாமில் இருந்து வரும் தரவுகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. கடந்த 2024ல் மட்டும் அம்மாநிலத்தில் 1.66 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அப்படி இருந்தும், அம்மாநிலத்தில் ஒரேயொரு நாய் காப்பகம் மட்டுமே இயங்கி வருகிறது



* நாய்களின் இனப் பெருக்கத்திற்கேற்ப, கருத்தடை மையங்களை புதிதாக அமைக்க வேண்டும்


* தெருநாய்களை கண்டுபிடிக்கும் திறன் பெற்றவர்களையும், உதவிக்காக மாநில அரசுகள் சேர்த்துக் கொள்ளலாம்.


இவ்வாறு கருத்து தெரிவித்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். ஒரு வாரத்திற்குள், அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமாக தங்களது மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.



- டில்லி சிறப்பு நிருபர் -

Advertisement