குமரியில், 1,000 மெகாவாட் நீரேற்று மின் உற்பத்தி திட்டம்

கன்னியாகுமரி: தமிழகத்தில் பொது - தனியார் கூட்டு முயற்சியில், 14,500 மெகாவாட் திறனில், 15 நீரேற்று மின் நிலையங்களை அமைக்க மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலையில், தலா, 250 மெகா வாட் திறனில் நான்கு அலகுகள் என, மொத்தம், 1,000 மெகா வாட் திறனில் நீரேற்று மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

திட்ட மதிப்பீட்டு செலவு, 5,624 கோடி ரூபாய். இந்த மின் நிலையத்தில் உச்ச மின் தேவையை சமாளிக்க, தினமும் ஆறு மணி நேரம் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

திட்டத்திற்கு, 400 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட உள்ளது. இதில், 151 ஏக்கர் வன பகுதியில் இடம்பெறுகிறது. மேல் அணைக்கு, 75 ஏக்கர், கீழ் அணைக்கு, 115 ஏக்கரும் பயன்படுத்தப்படும்.

வெள்ளிமலை நீரேற்று மின் திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது, கட்டுமான பணிக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறையிடம், அனுமதி கேட்டு, பசுமை எரிசக்தி கழகம் விண்ணப்பம் செய்துள்ளது.

Advertisement