போலி தொழுநோய் சான்றிதழ் வழங்கி ஆசிரியரான 27 பேர் மீது விசாரணை?
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், போலி தொழுநோய் சான்றிதழ் வழங்கி, 27 பேர் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக அரசு, 1989ம் ஆண்டில், தொழுநோய் பாதித்து, 40 சதவீதத்திற்கு மேல் நிரந்தர ஊனம் உள்ளவர்களுக்கு, அரசு வேலையில் முன்னுரிமை வழங்கியது.
அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், 27 பேர் போலியாக, தொழுநோய் ஊன மருத்துவ சான்றிதழ் வழங்கி, ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்சி முடித்த, 42 பேர், கிருஷ்ணகிரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போலியாக, தொழுநோய் ஊன மருத்துவ சான்றிதழ் வழங்கி, முன்னுரிமை அடிப்படையில், 2003 முதல், 2007 வரை, ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளனர்.
பணியாணை நிபந்தனை
தற்போது, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய ஒன்றியங்களில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
தொழுநோய் ஊன மருத்துவ சான்றிதழ் பெற்று, ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், அவர்களின் பணியாணை நிபந்தனையின் படி, பணியில் சேரும் முன், கிருஷ்ணகிரி வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட மருத்துவ குழுவிடம் இருந்து, அவர்களின், 40 சதவீத தொழுநோய் ஊனம் உறுதி செய்தும், அந்த ஊனம் ஆசிரியர் பணியை செய்ய தடையாக இல்லை என்றும், உடல்நிலை தகுதி சான் றிதழ் பெற்று, வட்டார கல்வி அலுவலகத்தில் கொடுத்திருக்க வேண்டும்.
அதை சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலக பணி பதிவேட்டில் வைத்து பத்திரமாக பராமரிக்க வேண்டும் என உத்தரவு உள்ளது.
ஆனால், மேற்கண்ட, 27 ஆசிரியர்களின் தொழுநோய் ஊன சான்றிதழ்கள் அவர்களின் பணி புத்தகங்களில், இன்று வரை பராமரிக்கப்படவில்லை.
பதிவேட்டில் பராமரிப்பு
மாறாக, மருத்துவ குழுவால் வழங்கப்படாத மற்றும் பணி பதிவேட்டில் பராமரிக்கப்படாத, அந்த மருத்துவ சான்றிதழ், உண்மை தன்மை வாய்ந்தது என, போலி விசாரணை அறிக்கையை, 2007 அக்டோபரில் பெற்று, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பணி புத்தகத்தில், 2023ல் பதிவு செய்யப் பட்டுள்ளது.
மேற்படி, 27 ஆசிரியர்கள் நல்ல உடல்நிலையில் உள்ளார்கள் என்ற மருத்துவ சான்றிதழ் பணி பதிவேட்டில் பராமரிக்கப்படுகிறது.
எனவே, தொழுநோய் முன்னுரிமை பிரிவில், வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைப்படி, இடைநிலை ஆசிரியர் வேலையில் சேர்ந்த, 27 பேரின் தொழுநோய் ஊன மருத்துவ சான்றிதழ் குறித்து, மருத்துவ குழு மூலம் விசாரித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா கூறுகையில், ''போலி தொழுநோய் சான்றிதழ் வழங்கி, ஆசிரியர் பணியில் சேர்ந்தது குறித்து, விசாரணை நடத்தி வருகிறோம். அது குறித்த அறிக்கை வந்தவுடன், அரசுக்கு அனுப்பி விடுவோம்,'' என்றார்.
மேலும்
-
தலித் அதிகாரி பணியாற்றியதால் ஆத்திரம்: மாட்டுச் சாணத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்த திமுக தொழிற்சங்க நிர்வாகி
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.15,200 சரிவு
-
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசும் தி.மு.க
-
தமிழக அரசின் பிடிவாதத்தால் அந்தரத்தில் நிற்கும் சித்தா பல்கலை
-
செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள் விலை இருந்தும் லாபம் இல்லையென விவசாயிகள் வேதனை
-
வெயிலில் அதிகம் பணி செய்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு: உறுப்பு மாற்று சிகிச்சைக்காக 7,200 பேர் காத்திருப்பு