துப்பாக்கியை காட்டி மிரட்டிய அ.தி.மு.க., நிர்வாகிக்கு 'காப்பு'

நடுவீரப்பட்டு: குவாரி பிரச்னையில், அ.தி.மு.க., ஒன்றிய செயலரை துப்பாக்கி காட்டி மிரட்டிய, அதே கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு, கொஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர் வினோத், 40; அ.தி.மு.க., கடலுார் ஒன்றிய செயலர். இவருக்கு, சி.என்.,பாளையம், புத்திரன்குப்பத்தில் செம்மண் குவாரி உள்ளது. இந்த குவாரிக்கு அருகில், குழந்தைக்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க., ஒன்றிய விவசாய அணி துணை செயலர் கிருஷ்ணமூர்த்தியின் குவாரி இயங்கி வருகிறது.

கிருஷ்ணமூர்த்தி தனக்கு சொந்தமான குவாரியில், செம்மண் அள்ளியபோது வினோத்தின் இடத்திலும் சேர்த்து மண் அள்ளியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, நேற்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், கிருஷ்ணமூர்த்தியின் மகன் கோபால், 36, தான் வைத்துள்ள உரிமம் பெற்ற கை துப்பாக்கியை எடுத்து, வினோத், அவரது ஆதரவாளர்களை மிரட்டினார்.

நடுவீரப்பட்டு போலீசார், கோபாலை கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கோபால், அ.தி.மு.க., மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணை செயலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement