பி.டி. உஷா கணவர் காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்

கோழிக்கோடு: இந்திய முன்னாள் தடகள (ஓட்டம்) வீராங்கனை பி.டி. உஷா 61. கேரளாவை சேர்ந்த இவர், 'இந்திய தடகள ராணி' என்று அழைக்கப்படுகிறார். ஆசிய விளையாட்டு (4 தங்கம், 7 வெள்ளி), ஆசிய சாம்பியன்ஷிப் (14 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம்) போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். கடந்த 2022, ஜூலையில் ராஜ்யசபா எம்.பி.,யான இவர், 2022, டிசம்பரில் இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ.,) தலைவராக தேர்வானார்.

பி.டி. உஷாவின் கணவர் ஸ்ரீனிவாசன் 67, முன்னாள் மத்திய அரசு பணியாளர். இளம் வயதில் தேசிய அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஓய்வுக்கு பின், பி.டி. உஷாவின் தடகள பயிற்சி பள்ளியின் இணை நிறுவனர், பொருளாளராக இருந்தார்.
கோழிக்கோடுவில் உள்ள தனது வீட்டில் ஸ்ரீனிவாசன் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துமனைக்கு கொண்டு சென்ற போதும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
ஸ்ரீனிவாசனின் மறைவு செய்தி அறிந்த பிரதமர் மோடி, பி.டி. உஷாவை தொடர்பு கொண்டு தனது இரங்கலை தெரிவித்தார்.

Advertisement