விளம்பர நாடகத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்; திமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்

14

சென்னை: தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விளம்பர நாடகத்தை நிறுத்திக் கொண்டு, அவர்களுக்கான நியாயமான ஊதிய உயர்வை திமுக வழங்க வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


அவரது அறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்கள், ஊதிய உயர்வு கேட்டு கோரிக்கை வைத்த போது, கூடுதல் ஊதியம் வழங்காமல், அவர்களுக்கு உணவு வழங்குகிறோம் என்ற பெயரில் விளம்பர நாடகம் நடத்தினார் முதல்வர். மேலும், ஊதிய உயர்வு கேட்ட தூய்மைப் பணியாளர்களை அவமானப்படுத்தும் விதமாக, கோவையில், குப்பை அள்ளும் வாகனத்தில், அவர்களுக்கான உணவு கொண்டு செல்லப்பட்டது.


இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு, தரமற்றதாக இருக்கிறது என்றும், திமுக அரசு வழங்கும் இந்த உணவை உண்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், திருநெல்வேலி தூய்மைப் பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி, இந்த தரமற்ற உணவைக் கூட, அவர்களை வெகுநேரம் காத்திருக்க வைத்தே வழங்குகிறது திமுக அரசு.


முதல்வர் ஸ்டாலின் ஆழ்மனதில், அவர் கடையேழு வள்ளல்களில் ஒருவர் என்ற எண்ணத்தை யாரோ விதைத்துள்ளார்கள் போலும். நியாயமான ஊதிய உயர்வு கொடுப்பதை விட்டுவிட்டு, தரமற்ற உணவை வழங்கி, பொதுமக்களுக்கான சுகாதாரப் பணியை மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களின் சுயமரியாதையைக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார். மக்கள் வரிப்பணத்தில், மக்கள் பணியை மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களுக்குத் தரமான உணவைக் கூட வழங்க முடியவில்லை என்றால், எதற்காக வெட்டி விளம்பரங்கள் உங்களுக்கு?


தூய்மைப் பணியாளர்கள் யாரும், உணவுக்காக உங்களிடம் வந்து நிற்கவில்லை. தங்கள் பணிகளை, நேர்மையாகவும், நியாயமாகவும் மேற்கொள்ளும் அவர்களைத் தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருப்பதை ஏற்கவே முடியாது. உடனடியாக, தரக்குறைவான உணவு வழங்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு வழங்கும் விளம்பர நாடகத்தை நிறுத்திக் கொண்டு, அவர்களுக்கான நியாயமான ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement