அஜித் பவார் துறைகளை கேட்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள்


மும்பை: மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் வகித்த துறைகளை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என அக்கட்சி தலைவர்கள் முதல்வர் பட்னாவிசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்று முன்தினம்( ஜன.,28) பாராமதியில் நடந்த கட்சி நிகழ்ச்சிக்கு சென்ற போது விமான விபத்தில் உயிரிழந்தார். நேற்று அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவர் மஹாராஷ்டிரா அரசில் நிதித்துறை விளையாட்டுத்துறை மற்றும் மாநில சுங்கத்துறைகளை கவனித்து வந்தார். தற்போது அவர் மறைவைத் தொடர்ந்து இந்த துறைகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அக்கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இது தொடர்பாக அக்கட்சித் தலைவர்கள் பிரபுல் படேல் சுனித் தத்கரே மற்றும் மகஜ் புஜ்பால் ஆகியோர் முதல்வர் பட்னாவிசை அவரது வீட்டில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
பிறகு நிருபர்களிடம் பேசிய பிரபுல் படேல், காலியான பதவிகளை விரைவில் நிரப்ப வேண்டும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். மக்களின் உணர்வுகளை மதித்து எந்த முடிவும் எடுக்கப்படும். நாங்கள் மஹாயுதி கூட்டணியில் இருக்கிறோம். எனவே அஜித் பவார் வகித்த துறைகளை நிரப்ப வேண்டும் என சரியான முடிவு எடுத்துள்ளோம். இந்த சோகத்தில் இருந்து வெளியே வர குடும்பத்தினருக்கு நேரம் அளிக்க வேண்டும். கட்சியின் எதிர்காலம் குறித்து சுனேந்திரா மற்றும் குடும்பத்தினருடன் விரைவில் ஆலோசனை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

அஜித் பவாரின் திடீர் மறைவு, தேசியவாத காங்கிரசில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. கட்சியின் எதிர்காலம், தாய்க்கட்சியுடன் இணைக்கப்படுமா என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. நாளை மறுநாள் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் சுனேந்திரா, சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இவர் ராஜ்யசபா எம்பி ஆக உள்ளார்.

Advertisement