தமிழக தேர்தல் பணிக்கு 72 பொறுப்பாளர்கள்; முக்கிய நிர்வாகிகளை களமிறக்கிய பா.ஜ.,

8


சென்னை: சட்டசபை தேர்தல் பணிகளை கண்காணிக்க, மத்திய அமைச்சர் முருகன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக, தமிழக பா.ஜ., நியமித்துள்ளது.


தமிழக சட்டசபை தேர்தலுக்காக, 234 தொகுதிகளிலும், 'பூத் கமிட்டி' கூட்டம் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிட, ஒவ்வொரு தொகுதிக்கும், ஒரு பொறுப்பாளர், அமைப்பாளர், இணை அமைப்பாளர் என, மூன்று பேரை, தமிழக பா.ஜ., நியமித்தது.

தற்போது, தேர்தல் நெருங்கிய நிலையில், தே.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், பா.ஜ.,வினரின் தேர்தல் பணிகளை கண்காணிக்க, இரு தொகுதிகள் முதல் ஏழு தொகுதிகளுக்கு, தலா ஒரு பொறுப்பாளரை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்துள்ளார்.

அதன்படி, ஊட்டி, திருப்பூர் வடக்கு, வால்பாறை, திருப்பரங்குன்றம், ராதாபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மத்திய அமைச்சர் முருகன்; நாகர்கோவில், தி.நகர், பட்டுக்கோட்டை, ஓசூர், வேலுார், ராஜபாளையம், கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளுக்கு பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதுபோல, சிங்காநல்லுார், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்பநாமபுரம் ஆகிய தொகுதிகளுக்கு தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை; தென்காசி, பரமக்குடி, மேட்டுப்பாளையம், பழனி ஆகிய தொகுதிகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


பா.ஜ., மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் என 72 பேர், இதுபோன்று பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும், 'தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், தொடர் சுற்றுப்பயணம் செல்ல வேண்டும். ஒரு தொகுதியில் குறைந்தது, இரு முறையாவது முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.

'தொகுதிகளில் உள்ள சமூகத்தலைவர்களை சந்திப்பது, கட்சியின் மாவட்ட, மண்டல் அணி, பிரிவுகளின் நிர்வாகிகளை சந்திப்பது, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்றுவது ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என, நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.

Advertisement