உரிய நேரத்தில் உரிய முடிவு; கூட்டணி பற்றி சொல்கிறார் பிரேமலதா

19


திருநெல்வேலி: ''கூட்டணி முடிவெடுப்பதில் உரிய நேரத்தில், உரிய முடிவை தே.மு.தி.க., எடுக்கும்,'' என, திருநெல்வேலியில் அதன் பொது செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.


திருநெல்வேலியில் தே.மு.தி.க., பூத் கமிட்டி, நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் பொது செயலாளர் பிரேமலதா தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், துணைச்செயலாளர்கள் ஆனந்த மணி, தவசி தம்பா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின் பிரேமலதா கூறியதாவது :பிழைப்புத்தேடி பீகாரிலிருந்து தமிழகம் வந்த ஒரு குடும்பமே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இத்தகைய கொடூரச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும். மதுரையில் தவறுகளை சுட்டிக்காட்டிய அரசு அதிகாரி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற குற்றங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடப்பது கவலைக்குரியது.

திருநெல்வேலியில் பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதற்கெல்லாம் டாஸ்மாக், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராள புழக்கமே காரணம். தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும் என்பதே தே.மு.தி.க.,வின் எண்ணம். ஆனால், தற்போது போதை கலாசாரம் இளைஞர்களை வழிதவறச் செய்து வருகிறது. அரசு இரும்புக்கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த வேண்டும்.


ஒருகாலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாகப் பேசப்பட்ட நம் காவல்துறைக்கு தன்னாட்சி அதிகாரமும், முழு சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும். மதுரையில் அரசு அதிகாரி கொல்லப்பட்ட சம்பவத்தை விபத்து என முடிக்க முயன்றனர். ஆனால், காவல்துறை தற்போது உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறை இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும்.


தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியாகவில்லை. எனவே, கூட்டணி முடிவெடுப்பதில் எந்த அவசரமும் இல்லை. உரிய நேரத்தில், உரிய முடிவை தே.மு.தி.க., எடுக்கும். 2011 வரை தனித்து போட்டியிட்ட கட்சி தே.மு.தி.க.,. மாவட்டச் செயலாளர்களின் விருப்பம் மற்றும் கட்சியின் கௌரவத்தை கருத்தில் கொண்டு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். தே.மு.தி.க., அங்கம் வகிக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.


தே.மு.தி.க., லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி. ஸ்டெர்லைட் போன்ற விவகாரங்களில் எந்தெந்த கட்சிகள் கையூட்டு பெற்றன என்ற பட்டியல் உங்களிடம் உள்ளது. அதில் தே.மு.தி.க., பெயர் உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் சொந்த உழைப்பில் கட்சியை வளர்த்து வருகிறோம்.


யாரும் எதையும் எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை. அமைதியான, மகிழ்ச்சியான தமிழகத்தை உருவாக்குவதே கேப்டனின் கனவு. தாமிரபரணி ஆற்றின் நிலை, சாலை வசதிகள் உள்ளிட்ட உள்ளூர் பிரச்னைகள் குறித்து சட்டசபையில் குரல் கொடுத்து உரிய தீர்வு காணப்படும். தே.மு.தி.க.,வை நம்பி பணியாற்றுபவர்களுக்கு உள்ளாட்சிகளிலும் அரசியலிலும் பொறுப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement