சோழர்களின் பாரம்பரியம், பெருமைக்கு அவமானம்: திருமாவளவனுக்கு அண்ணாமலை கண்டனம்

22


சென்னை: திருமாவளவனின் பேச்சு சோழர் மற்றும் பாண்டியர்களின் பாரம்பரியத்துக்கும், பெருமைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


சோழ மன்னர்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஊழல் நிறைந்த ஹிந்துக்களுக்கு எதிரான இந்த திமுக ஆட்சியின் கீழ் தமிழகத்தில் எது நடந்தாலும் பாஜ மற்றும் சங் பரிவார் அமைப்புகளை குறை சொல்லி வந்த இண்டி கூட்டணி எம்பி திருமாவளவன், இப்போது 10 நூற்றாண்டுகளுக்கு மேலாக பின்னோக்கி சென்று, மாபெரும் மன்னர்களான சோழர்கள் மற்றும் பாண்டியர்களை அவதூறு செய்துள்ளார். அந்த மன்னர்களின் சிறப்பான ஆட்சியின் கீழ் தமிழ் மொழி இன்றைய தமிழகத்தின் புவியியல் எல்லைகளையும் கடந்து செழித்து வளர்ந்துள்ளது.


இது சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் பாரம்பரியத்திற்கும் பெருமைக்கும் இழைக்கப்பட்ட அவமானம். திருமாவளவனின் இந்த பேச்சு அவரது ஆழ்ந்த வரலாற்று அறியாமையை மட்டும் வெளிப்படுத்துகிறது. ராஜராஜன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரின் பெயர்கள் தமிழ் பெயர்களா என்று அவர் கேள்வி எழுப்பினால், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, மற்றும் கோபாலபுரம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் தமிழ் பெயர்கள் ஒருவர் கேட்கக்கூடும்.


தமிழ் மொழியில் உண்மையான வளர்ச்சிக்கும் உலகளாவிய பெருமைக்கும் எந்த ஒரு பங்கும் அளிக்காத அரசியல் கட்சி என்றால் அது திமுக மற்றும் கூட்டணி கட்சி தான். திமுக துவங்கப்பட்ட 1949 இல் தமிழகத்தின் வரலாறு துவங்கவில்லை. மாறாக பிரச்சனைகள் தான் தூங்கின என்பதை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement