நாடு முழுதும் பள்ளி மாணவியருக்கு இலவச நாப்கின்!... உச்ச நீதிமன்றம் உத்தரவு
'நாடு முழுதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கு, மக்கும் தன்மை கொண்ட சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக வழங்கப்படுவதை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுநல மனு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவியருக்கு, மத்திய அரசின், 'பள்ளி செல்லும் மாணவியருக்கான மாதவிடாய் சுகாதார கொள்கை'யை நாடு முழுதும் அமல்படுத்த கோரி, ஜெயா தாக்கூர் என்பவர் 2024ல் பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இலவச சானிட்டரி நாப்கின்கள்
மாதவிடாய் ஆரோக்கியம் என்பது ஓர் அடிப்படை உரிமை. இது, பெண் குழந்தையின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் உள்ள, வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாகவும் மாதவிடாய் ஆரோக்கியம் உள்ளது.
எனவே, நாடு முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவியருக்கு, மக்கும் தன்மை உடைய மாதவிடாய் சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
அனைத்து பள்ளிகள்
இதை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களுக்கும், மாணவியருக்கும் தனித்தனி கழிப்பறைகள் இருப்பதை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.
அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த வசதிகளை வழங்க தவறும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
- டில்லி சிறப்பு நிருபர் -
மேலும்
-
மருதமலையில் தைப்பூசம்1,500 போலீஸ் பாதுகாப்பு
-
'மெட்டா இன்னோவா' கற்றல் மேலாண்மை தளம் அறிமுகம்
-
தேர்நிலையம் மார்க்கெட் பணி நிறைவு வியாபாரிகளுக்கு கடைகள் ஒப்படைப்பு
-
கூடுதல் உலர்களம் தேவை! நெல் காய வைக்க எதிர்பார்ப்பு
-
பிரதான ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றாததால் தொடரும் நெரிசல்
-
ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்