தொழில் முடிவுகளை எடுப்பதில் துணை நின்றுள்ளது 'தினமலர்'

எனக்கு ஒவ்வொரு நாளும் விடிவது சூரிய உதயத்தால் மட்டுமல்ல, வாசலில் விழும் 'தினமலர்' நாளிதழின் ஓசையாலும் தான்.

கடந்த 25 ஆண்டுகளாக, என் காலை பொழுதில், டீயை விடவும் இன்றியமையாத ஒன்றாக தினமலர் மாறிவிட்டது. ஒரு வாசகனாக துவங்கி, இன்று தமிழக தொழில்துறையின் ஒரு அங்கமாக பயணிக்கும் வரை, தினமலர் என் வாழ்வோடும், வளர்ச்சியோடும் இரண்டறக் கலந்துள்ளது.

ஜவுளி துறையில் உற்பத்தி, சில்லரை விற்பனை என நான் கால் பதித்த அனைத்து தொழில்களிலும், சந்தை நிலவரத்தையும் மக்கள் தேவையையும், அணு அளவும் பிசகாமல், துல்லியமாக தெரிவிப்பதில் தினமலர் நிகரற்றது என உணர்ந்திருக்கிறேன். ஒரு செய்தியை வெறும் தகவலாக பார்க்காமல், அதன் சமூக தாக்கத்தையும் வணிக முக்கியத்துவத்தையும் அலசி ஆராயும் அதன் பண்பு பாராட்டுக்குரியது.

வணிக உலகிற்கும், பொதுமக்களுக்கும் இடையே ஒரு நேர்மையான பாலமாக தினமலர் நாளிதழ் செயல்பட்டு வருகிறது. செய்திகளின் உண்மைத்தன்மை மற்றும் நடுநிலைமை காரணமாகவே, கடந்த 75 ஆண்டுகளாக தமிழகத்தின் முத்னமை தகவல் களஞ்சியமாக இது திகழ்கிறது.

25 ஆண்டு கால தீவிர வாசகனாக, அந்த தாள்களில் நான் வாசித்த ஒவ்வொரு செய்தியும், கட்டுரையும் என் அறிவை மெருகேற்றியதுடன், என் தொழில்முறை முடிவுகளை எடுப்பதிலும் பெரும் துணையாக இருந்துள்ளன. 75 ஆண்டுகள் என்பது, ஒரு ஊடகத்திற்கு சாமானியமான சாதனையல்ல. நேர்மை எனும் அடித்தளத்தில் நம்பிக்கை எனும் கோபுரத்தை எழுப்பி இருப்பதால் தான் இது சாத்தியமாகி உள்ளது. தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுதும் பரந்து வாழும் தமிழ் நெஞ்சங்களுக்கு தாய்நாட்டின் குரலாக தொடர்ந்து ஒலிக்கும் தினமலர், இன்னும் பல நுாற்றாண்டுகள் தன் சீரிய பணியை தொடர விழைகிறேன்.



கே.ராஜா

நிறுவனர், பொம்மீஸ் (இண்டிகா பேப்ரிக்ஸ் பி.லிட்.,)

Advertisement