அஜித் பவாருக்கு கட்சி ஒன்று சேர வேண்டுமென்பதே...கடைசி ஆசை! மஹா., துணை முதல்வர் ஆகிறார் பவார் மனைவி?

2

மும்பை: மஹாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார், 66, விமான விபத்தில் உயிரிழந்த நிலையில், பிளவுபட்ட தேசியவாத காங்., இணைய வேண்டும் என்பதே அவரது கடைசி விருப்பமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு பிரிவுகளின் இணைப்பு விழா, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் நடக்கவுள்ளதாகவும், துணை முதல்வராக அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


காங்கிரசில் இருந்து விலகிய சரத் பவார், 1999ல், தேசியவாத காங்., என்ற கட்சியை துவக்கினார். மஹாராஷ்டிராவில் பிரதான கட்சிகளில் ஒன்றாக இக்கட்சி உள்ளது. தன் சகோதரர் மகன் அஜித் பவாரை கட்சியின் அறிவிக்கப்படாத வாரிசாக கொண்டு வந்தார் சரத் பவார்.


கட்சியில் படிப்படியாக வளர்ந்த அஜித் பவார், சரத் பவாருக்கு அடுத்த இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.



கடந்த, 2023 ஜூலையில், குருவான சரத் பவாருக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய அஜித் பவார், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ., கூட்டணியில் இணைந்து துணை முதல்வரானார்; கட்சி மற்றும் சின்னத்தையும் கைப்பற்றினார்.


முக்கிய துறைகள்

சரத் பவாருடன் இருந்த மூத்த தலைவர்கள் பிரபுல் படேல், சகன் புஜ்பால் போன்ற தலைவர்களும் அஜித் பவாருடன் சென்றனர். 2024 சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட அஜித் பவார், 41 தொகுதிகளை கைப்பற்றி தன் பலத்தை நிரூபித்தார். தொடர்ந்து, துணை முதல்வராக மீண்டும் பதவியேற்றார்.


கடந்த 15ல் நடந்த மாநகராட்சி தேர்தலில், புனே, பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சிகளில், காங்., கூட்டணியில் இருந்த சரத் பவாருடன் கூட்டணி வைத்தார் அஜித் பவார். எனினும் மாநகராட்சிகளை கைப்பற்ற முடியவில்லை.



பிளவுபட்ட தேசியவாத காங்கிரசை மீண்டும் இணைப்பது குறித்து, சரத் பவார் - அஜித் பவார் ஆகியோர் கடந்த டிசம்பர் முதல் அவ்வப்போது சந்தித்து பேசினர்.


மாநகராட்சி தேர்தலுக்கு பின், கட்சி இணைப்பை வைத்துக் கொள்ளலாம் என இருவரும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.


வயது மூப்பு காரணமாக அவதிப்படும் சரத் பவார், 85, இதற்கு முழு மனதுடன் சம்மதித்தார். தன் மகளும், லோக்சபா எம்.பி.,யுமான சுப்ரியா சுலேவை கட்சியில் இரண்டாம் இடத்தில் அமர வைக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார்.


புனே, ரத்னகிரி, ராய்கட் உள்ளிட்ட 12 மாவட்டங்களில், வரும் 5ல் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது.

தேர்தல் முடிவுக்கு பின், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில், கட்சி இணைப்பு விழாவை நடத்த அஜித் பவார் திட்டமிட்டிருந்ததாகவும் இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.



இந்த சூழலில் தான், புனே மாவட்டத்தின் பாராமதிக்கு தேர்தல் பிரசாரத்துக்காக, சமீபத்தில் சென்ற அஜித் பவார், பாராமதி விமான நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். அவருடன் விமானிகள் இருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.


இந்நிலையில், மஹாராஷ்டிரா அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த அஜித் பவார், நிதி, திட்டமிடல், கலால் போன்ற முக்கிய துறைகளை கவனித்து வந்தார். இந்த துறைகளை மீண்டும் கேட்டுப் பெறுவதில் தேசியவாத காங்., உறுதியாக உள்ளது.


முதல்வருடன் சந்திப்பு

இது தொடர்பாக, மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிசை சந்தித்து, தேசியவாத காங்., மூத்த நிர்வாகிகள் சகன் புஜ்பால், சுனில் தட்கரே, தனஞ்சய் முண்டே ஆகியோர் மும்பையில் நேற்று பேச்சு நடத்தினர்.

அஜித் பவாரின் நெருங்கிய நண்பரும், முன்னாள் அமைச்சருமான அனில் தேஷ்முக் கூறுகையில், ''பிளவுபட்ட தேசியவாத காங்., விரைவில் இணைய வேண்டும் என்பதே அஜித் பவாரின் ஒரே விருப்பமாக இருந்தது.


''இதற்கான பணியில், அவர் முழு மனதுடன் ஈடுபட்டு வந்தார். தற்போது அவர் நம்முடன் இல்லை. அவரது விருப்பத்தை நாம் நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.



அஜித் பவாருடன், 40 ஆண்டுகளாக பயணித்த கிரண் குஜார் கூறுகையில், ''பிளவுபட்ட தேசியவாத காங்கிரசை மீண்டும் இணைப்பதில், 100 சதவீதம் அஜித் பவார் உறுதியாக இருந்தார். விரைவில் இணைப்பு நடக்கவிருப்பதாக என்னிடம் அவர் தெரிவித்தார்.


''இது தொடர்பாக சரத் பவாருடன் நடந்த சந்திப்பு சுமுகமாக இருந்ததாகவும் அவர் கூறினார். தற்போது அவர் நம்மை விட்டு சென்று விட்டார். அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.


@block_B@

துணை முதல்வர் ஆகிறாரா அஜித் மனைவி சுநேத்ரா?

தேசியவாத காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், மும்பையில் இன்று நடக்கிறது. இதில், கட்சியின் சட்டசபை குழு தலைவராக, மறைந்த அஜித் பவாரின் மனைவியும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுநேத்ரா தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும், இன்று மாலையே அவர் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி அவர் துணை முதல்வரானால், மஹாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர் என்ற சிறப்பை பெறுவார். தன் கணவர் அஜித் பவார் பிரதிநிதித்துவப்படுத்திய பாராமதியில் நடக்கும் இடைத்தேர்தலில் களமிறங்கவும் சுநேத்ரா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், பிளவுபட்ட தேசியவாத காங்., இணையும் பட்சத்தில், அதன் தலைவர் பதவியை கைப்பற்றவும் அவர் உறுதியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.block_B

Advertisement