அரசு நிலத்தை மீண்டும் 'ஆட்டை' போட்ட தனியார்!

2

துண்டால், பெஞ்சை தட்டியபடியே அமர்ந்த பெரியசாமி அண்ணாச்சி, “மாணவர்கள் எண்ணிக்கை குறைஞ்சிட்டே போவுது வே...” என, அரட்டையை ஆரம்பித்தார்.

“எந்த ஊருலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.

“சென்னை தரமணியில், தமிழக அரசுக்கு சொந்தமான தோல் தொழில்நுட்ப பயிலகம் இருக்கு... இங்க, 2025 - 26 கல்வியாண்டில், 120 மாணவர்களை சேர்த்திருக்கணும்... ஆனா, இங்க தலைமை பதவியில் இருக்கிறவர், 16 மாணவர்களை மட்டும் தான் சேர்த்திருக்காரு வே...

“அவருக்கு, நிர்வாக திறமையும் இல்ல... தனக்கு பிடிக்காத ஊழியர்களை எல்லாம், உயர் அதிகாரியிடம், 'போட்டு' குடுத்துடுதாரு... இதனால, இவரை பார்த்தாலே பெண் ஊழியர்கள் எல்லாம் பயந்து நடுங்குதாவ வே...

“அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு நிரந்தர முதல்வர்கள் இல்லாத பட்சத்துல, துறை தலைவர்களுக்கு கூடுதல் பொறுப்பா, முதல்வர் பதவி தருவாவ... ஆனா, அந்த துறை தலைவர்கள் இன்ஜினியரிங் அல்லது அதுக்கு இணையான தொழில்நுட்ப கல்வி படிச்சிருக்கணும் வே...

“ஆனா, இங்க தலைமை பதவியில் இருக்கிறவர், ஆங்கில விரிவுரையாளர்... 'இந்த குறைகளை எல்லாம் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திற்கு புதுசா வந்திருக்கிற கமிஷனர் தீர்த்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கணும்'னு, இங்க வேலை பார்க்கிற ஊழியர்கள் புலம்புதாவ வே...” என்றார், அண்ணாச்சி.

“சீனிவாசன் தள்ளி உட்காருங்க...” என்ற அன்வர்பாயே, “புதிய தலைவர் மீது எல்லாரும் அதிருப்தியில இருக்காங்க பா...” என்றார்.

“எந்த கட்சியில ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.

“திருச்சி தெற்கு மாவட்ட காங்., தலைவரா, ராஜலிங்கம் என்பவரை சமீபத்தில் நியமிச்சாங்க... இவர், கட்சி அலுவலகத்துக்கு தன் ஆதரவாளர்கள் சிலருடன் போய் பொறுப்பு ஏத்துக்கிட்டாரு பா...

“தெற்கு மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, வட்டார காங்., நிர்வாகிகள்னு யாரையும் கூப்பிடல... இதனால, ராஜலிங்கம் மேல எல்லாரும் அதிருப்தியில இருந்தாங்க பா...

“இது, ராஜலிங்கத்துக்கு லேட்டா தெரியவந்திருக்கு... இப்ப, ஒவ்வொரு நிர்வாகிக்கும் போன் போட்டு, 'இனி இப்படி நடக்காது... எல்லாரும் ஒற்றுமையா கட்சி வளர்ச்சிக்கு பாடுபடலாம்'னு சமாதானப்படுத்திட்டு இருக்காரு பா...” என்றார், அன்வர்பாய்.

“கிட்டத்தட்ட, 80 கோடி ரூபாய் நிலத்தை காணலைங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

“சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 18வது வார்டுல, நைலான் இழை தயாரிக்கும் எஸ்.ஆர்.எப்., என்ற தனியார் நிறுவனம் இயங்குது... இந்த நிறுவனத்தின் காம்பவுண்டு சுவருக்குள்ள, ஆக்கிரமிப்பில் இருந்த அரசுக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை வருவாய் துறையினர் கண்டுபிடிச்சாங்க...

“அப்புறமா, மாநகராட்சி அதிகாரிகள், தனியார் நிறுவன காம்பவுண்டு சுவரை 2023 ஜூன்ல இடிச்சி தள்ளிட்டு, 80 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மீட்டாங்க... அப்புறமா, அங்க 30 அடி அகலத்தில், மழைநீர் வடிகாலும் அமைச்சாங்க...

“இந்த பணிகள் எல்லாம் முடிஞ்சதும், இடிக்கப்பட்ட காம்பவுண்டு சுவரை தனியார் நிறுவனம் மறுபடியும் கட்டிடுச்சு... இதுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கல... இதனால, மீட்கப்பட்ட நிலம் அரசு கைக்கு வந்துடுச்சா அல்லது மறுபடியும் தனியார் நிறுவனம் வசம் போயிடுச்சான்னு தெரியலைங்க...” என முடித்தார், அந்தோணிசாமி.

பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement