'டவுட்' தனபாலு

1

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு: 'அடுத்ததும் எங்கள் ஆட்சி தான்' என்று ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், 'டூ பாயின்ட் ஜீரோ ஆட்சி' என மக்கள் சொல்கின்றனர். தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை தான் அவர்களுக்கு வில்லனாக போகிறது. தேர்தல் வாக்குறுதிகளில், தி.மு.க., அரசு, 15 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. எனவே, அவர்கள் கொடுக்கப்போகும் வாக்குறுதிகளே, ஏவுகணைகளாக மாறும்.

டவுட் தனபாலு: வாக்குறுதிகள் வில்லனாக மாறும் என்பது உங்களுக்கும் பொருந்தும் தானே... 'மகளிருக்கு, 2,000 ரூபாய் உரிமைத்தொகை, ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம், பெண்களுக்கு ஸ்கூட்டர் மானியம்'னு உங்க தலைவர் பழனிசாமியும் வாக்குறுதிகளை வாரி வாரி வழங்குறாரே... அவற்றை எல்லாம் நிறைவேற்ற நிதி ஆதாரம் இருக்கான்னு யோசனை பண்ணி பார்த்தீங்களா என்ற, 'டவுட்' வருதே!


த.வெ.க., தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்:
நான் பல தலைவர்களுடன் பயணித்து இருக்கிறேன். மிகப்பெரிய கூட்டத்தை கூட்ட, ஒரு கோடி ரூபாய் செலவாகும். ஆனால், ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், விஜய்க்கு கூட்டம் கூடுகிறது. இன்னும் மூன்று மாதங்களில், எல்லா அதிகாரிகளும் நம் பேச்சை கேட்கும் காலம் வந்துவிடும். இதை யாராலும் தடுக்க முடியாது.

டவுட் தனபாலு:
உங்க முன்னாள் தலைவி ஜெயலலிதாவுக்கு, நிறைய பிரசார கூட்டங்களை நீங்க ஏற்பாடு பண்ணியிருக்கீங்க... அதுக்கெல்லாம் கோடி, கோடியா செலவழிச்சி தான் கூட்டத்தை திரட்டுனீங்களா... ஜெ.,க்கு வந்த கூட்டம் எல்லாம் காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம்தானா என்ற, 'டவுட்'கள் வருதே!


காங்., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தமிழக பா.ஜ., உறுப்பினருமான விஜயதாரணி: ஜனநாயகன் படம் தொடர்பாக, தணிக்கை சான்று பெற உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தால் போதும்; நொடியில் பிரச்னை தீர்ந்துவிடும். ஆனால், பா.ஜ.,வை எதிர்த்து அரசியல் செய்வதாக நினைத்து கொண்டு, ஜனநாயகன் படம் ரிலீசாகாததற்கு பா.ஜ., மீது விஜய் பழிபோட பார்க்கிறார். இப்படியே அவர் அரசியல் செய்து கொண்டிருந்தால், கடைசி வரை ஜனநாயகன் வெளிவராமல் போய்விடும்.

டவுட் தனபாலு:
அதானே... நாடு முழுக்க செல்வாக்கா இருக்கும், பா.ஜ.,வுக்கு ஒரு பிராந்திய மொழி நடிகரின் படத்தை தடுக்கிறதா வேலை... அதனால, 'சும்மா சும்மா எங்களை சீண்டிட்டு இருந்தா, படம் வெளிவராமலே பண்ணிடுவோம்'னு அன்பா மிரட்டுறாங்களோ என்ற, 'டவுட்'டும் வருதே!

Advertisement