தே.மு.தி.க.,விற்கு கல்யாணம் எப்போது?
சுக.மதிமாறன்,
நத்தம், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
பொதுவாக, எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம்
செய்து வைக்கத்தான் விரும்புவர்; அதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதேநேரம், சில பெற்றோர் நல்ல வரன் வரும்போது அதை பயன்படுத்திக் கொள்ளாமல், அதிக வரதட்சணையைஎதிர்பார்த்து காத்திருப்பர்.
பெற்றோரின் இத்தகைய பேராசையால், உரிய வயதில் பிள்ளைகளுக்கு திருமணம்
செய்து வைக்காமல், அவர்கள் முதிர்கன்னி, முதிர் காளைகளாக ஆனபின், வேறு
வழியின்றி, கிடைக்கும் வரனுக்கு திருமணம் செய்து வைப்பர். அவர்களும் இளமை
துடிப்பு அடங்கிய வயதில் குழந்தை பெற்று, ஒப்புக்கு வாழ்கின்றனர்.
'காற்றுள்ள போதே துாற்றிக்கொள்' என்ற பழமொழிக்கு ஏற்ப, சரியான நேரத்தில்,
தங்கள்தகுதிக்கு ஏற்ற நல்ல வரனை மணமுடித்துக் கொடுப்பது தான், நல்ல
பெற்றோருக்கு அழகு.
அவ்வகையில், தே.மு.தி.க., கட்சியின் அம்மாவான
பிரேமலதா, சீட்டையும், நோட்டையும் எதிர்பார்த்து, உரியநேரத்தில் கூட்டணி
அமைக்காமல் நாட்களை கடத்திக் கொண்டே போனால், தே.மு.தி.க., தனிக்கட்டையாகி
விடும்.
எனவே, அதிக வரதட்சணை எதிர்பார்த்து காலத்தை கடத்தாமல்,
பாரம்பரியம் மிக்க தேசிய குடும்பமா, தனிக் குடும்பமா என முடிவு செய்து,
தே.மு.தி.க., எனும் குழந்தைக்கு, பிரேமலதா நல்லபடியாக திருமணத்தை முடிக்க
வேண்டும்!
சாக்குபோக்கு சரிதானா?
எம்.கோபால் மாரிமுத்து, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில் முதலீடு செய்யாமல் தொழில் நிறுவனங்கள் வெளி மாநிலங்களுக்கு செல்வது ஏன்?' என்று எதிர்க்கட்சியினர் சட்டசபையில் கேள்வி எழுப்பினால், 'அ.தி.மு.க., ஆட்சியில் வந்தது எல்லாம் ஓடிப்போய் விட்டன; அது ஏன் என்று சொல்லட்டுமா...' என்கிறார் திராவிட மாடல் முதல்வர்.
அவர்கள் சரியில்லை என்று தானே மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தனர்?
தொழில் துறை அமைச்சரோ, 'ஆந்திரா போன்ற மாநிலங்கள் இலவசமாக நிலம் தருகின்றன; நாம் இலவசமாக கொடுக்க முடியுமா...' என்று கேட்கிறார்.
அந்த அளவு நிதிநிலை மோசம் என்றால், கள்ளச்சாராய இறப்புக்கு, 10 லட்சம் ரூபாய் கொடுத்தது ஏன்? பொங்கல் பரிசாக, 3,000 ரூபாய், பேருந்தில் இலவச பயணம், மகளிருக்கு மாதந் தோறும், 1,000 ரூபாய் ஏன் கொடுக்க வேண்டும்?
கடந்த ஆட்சியில் உயர்த்தப்படாத வீட்டு வரியை, தி.மு.க., ஆட்சியில் ஆண்டுக்கு, 6 சதவீதமாக உயர்த்தியது ஏன்?
மின் கட்டணத்தை உயர்த்திவிட்டு, மாதாமாதம் மின் கட்டணம் வசூலிக்க மறுப்பது ஏன்?
பால் விலை உயர்வு ஏன்? பல் இளிக்கும் சாலைகளுக்கு வரி உயர்வு ஏன்? குடிநீர் வழங்கப்படாத வீடுகளுக்கு குடிநீர் வரி ஏன்? தமிழக மக்கள் மீது, 10 லட்சம் கோடி ரூபாய் கடன் ஏன்?
ஆந்திர அரசு கொடுத்தது போல் நிலத்தை மட்டும் தமிழகம் கொடுத்திருந்தால், குடித்து குடித்து உருக்குலைந்து போய் ஊரை சுற்றிவரும் இளைஞர்கள் பல்லாயிரம் பேருக்கு, நிரந்தரமான வேலை கிடைத்திருக்கும். அதனால் ஒரு லட்சம் குடும்பங்களாவது நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கும்.
'பக்கத்து மாநிலம் வளம் பெறுவதை எதிர்க்கட்சி விரும்பவில்லையா?' என்று கேட்கிறார், தொழில் துறை அமைச்சர்.
பக்கத்து மாநிலத்தில் நல்ல மழை பெய்து, அணைகள் எல்லாம் நிறைந்து, அங்கே வளம் கொழித்தால், அங்குள்ள மக்கள் செழிப்பாக இருக்கட்டும் என்று வாழ்த்தலாமே... ஏன் அவர்களிடம் தண்ணீர் கேட்டு உண்ணாவிரதம் இருக்க வேண்டும், போராட வேண்டும்?
அவர்கள் புசித்தால், தமிழகத்தில் உள்ளவர்களின் பசி தீர்ந்து விடுமா?
சேமித்து வைக்க கிடங்குகள் இல்லாமல், சென்ற ஆண்டு மட்டும் தானியங்கள், 1.23 கோடி டன், தோட்டப்பயிர்கள், 3 கோடி டன்; காய்கறிகள், 1.2 கோடி டன்; பருப்பு, 13.7 லட்சம் டன்; பழங்கள், 73 லட்சம் டன் விளைபொருட்கள் அழுகி பயனற்றுப் போயுள்ளன.
இந்த லட்சணத்தில் ஆட்சி நடத்துகிறது, தி.மு.க., அரசு.
ஒரு தொழிலை துவங்க வாய்ப்பளித்தால், அதில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைத்து, அவர்கள் வாழ்க்கை தரம் உயரும். மக்களுக்கு இலவசங்களை வழங்கும் தேவை இருக்காது. இதனால், அரசின் செலவு குறையும்; வரிப்பணம் ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு பயன்படும்.
ஆனால், இதைப்பற்றியெல்லாம் ஆளும் அரசு சிந்திப்பதாக தெரியவில்லை. மாறாக, 'ஆடத் தெரியாதவள், மேடை கோணல்' என்று சொல்வது போல், முதலீடுகளை கோட்டை விட்டு, சாக்குபோக்கு கூறுகின்றனர்!
வன்மத்தை கக்கும் ஸ்டாலின்!
ஆர்.சேஷாத்ரி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சவாலே சமாளி என்ற திரைப்படத்தில், ஒரு பண்ணையாரிடம் கணக்குப் பிள்ளையாக வேலை பார்ப்பார், தமாஷ் நடிகர் நாகேஷ். அப்பண்ணையாரின் மீது கோபம் வரும்போது எல்லாம், தன்னிடம் உதவியாளராக உள்ள பணியாளரைப் போட்டு அடிப்பார்.
அந்த பணியாளரோ நாகேஷ் தன்னை ஏன் அடிக்கிறார் என்பது தெரியாமல் விழிப்பார். அதைப்போன்று தான், மதுராந்தகத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாடு குறித்து, 'வரும் சட்டசபை தேர்தல் ஆரிய - திராவிடத்திற்கு நடக்கும் போர்' என்று முழக்கம் இட்டுள்ளார், தி.மு.க., முதல்வர் ஸ்டாலின்.
தேசிய கூட்டணிக்கும், ஆரியத்திற்கும் என்ன சம்பந்தம்?
பிரதமர் மோடி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரன், பா.ம.க., தலைவர் அன்புமணி, தமிழக முன்னாள் பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இன்னாள் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் முனுசாமி என, மேடையில் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் கூட பிராமணர் இல்லையே!
பின், எதற்கு இந்த ஆரிய - திராவிட போர் முழக்கம்?
தி.மு.க.,விற்கு தேர்தல் தோல்வி பயம் வரும் போதெல்லாம், அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் தான், பிராமணர் மற்றும் ஹிந்தி எதிர்ப்பு!
ஏற்கனவே, தி.மு.க., கூட்டணி, விரிசல் விழுந்த கண்ணாடியாக உள்ளது. காங்கிரஸ் ஒரு பக்கம், அதிகாரத்தில் பங்கு கேட்கிறது; மறுபுறம், விடுதலை சிறுத்தைகள் கூடுதல் தொகுதி கேட்டு குடைச்சல் கொடுக்கிறது.
இப்படி தான் அல்லாடிக் கொண்டிருக்கையில், அ.தி.மு.க., தன் கூட்டணியை பலப்படுத்தி விட்டதே என்ற வயிற்றெரிச்சலிலும், பார்லிமென்ட் தேர்தலைப் போல், சட்டசபை தேர்தலிலும் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று போட்ட கணக்கு பொய்த்துப் போன எரிச்சலிலும், பிராமண துவேஷத்தை வெளிப்படுத்தியுள்ளார், ஸ்டாலின்.
பிராமணர்களை வசைபாடினால், தி.மு.க., ஜெயித்து விடுமா?
மேலும்
-
தலித் அதிகாரி பணியாற்றியதால் ஆத்திரம்: மாட்டுச் சாணத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்த திமுக தொழிற்சங்க நிர்வாகி
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.15,200 சரிவு
-
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசும் தி.மு.க
-
தமிழக அரசின் பிடிவாதத்தால் அந்தரத்தில் நிற்கும் சித்தா பல்கலை
-
செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள் விலை இருந்தும் லாபம் இல்லையென விவசாயிகள் வேதனை
-
வெயிலில் அதிகம் பணி செய்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு: உறுப்பு மாற்று சிகிச்சைக்காக 7,200 பேர் காத்திருப்பு