கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ரூ. 15,542 கோடி கடன் வழங்க திட்ட அறிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2026-27ஆம் நிதியாண்டில் ரூ.15,542.92 கோடி கடன் வழங்க நபார்டுத் திட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, 2026--27ஆம் நிதியாண்டில், ரூ.15,542.92 கோடி கடன் வழங்க நபார்டு வங்கி கணித்து வெளியிட்டுள்ளது. அரசு உதவித் திட்டங்களின் கீழ் கடன்களை விரைவாக அங்கீகரிக்க வேண்டும். வேளாண் துறையில் நடுத்தர மற்றும் நீண்டகால கடன்களுக்கு முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும். இத்திட்ட அறிக்கையின்படி ரூ.15,542.92 கோடியில் வேளாண்மைத் துறைக்கும், ரூ.12,681.99 கோடி, சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.1,011.45 கோடி. மற்றும் பிற முக்கியத் துறைகளுக்கு ரூ.1,849.48 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2026--27ஆம் ஆண்டிற்கான கடன் திட்டத்தை இறுதியாக உருவாக்க கிளை அளவிலான கடன் திட்டங்களை வங்கிகள் தயாரிப்பதுடன், இத்திட்ட ஆவணத்தைப் பயன்படுத்தி தங்கள் இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் சந்திரசேகரன், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித், நபார்டு மற்றும் வங்கியாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement