ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; முதல்முறையாக மகுடம் சூடினார் ரைபகினா

3


மெல்போர்ன்: பரபரப்பாக நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலில் வெற்றி பெற்ற கஜகஸ்தானைச் சேர்ந்த எலனா ரைபகினா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவருமான சபலென்காவும், 5ம் நிலை வீராங்கனையும், கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்தவருமான ரைபகினாவும் பலப்பரிட்சை நடத்தினர். விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியின் முதல் செட்டை, 6-4 என்ற கணக்கில் ரைபகினா கைப்பற்றினார். தொடர்ந்து, 2வது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி சபலென்கா பதிலடி கொடுத்தார்.

இதனால், சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் 3வது செட்டுக்கு ஆட்டம் சென்றது. இதில், முதலில் சபலென்காவே ஆதிக்கம் செலுத்தினார். 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது, திடீரென மீண்டெழுந்த ரைபகினா 6-4 என்ற கணக்கில் சபலென்காவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.

2 மணிநேரம் 18 நிமிடம் நடந்த இந்தப் போட்டியில் ரைபகினா 6-4,4-6,6-4 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றார். கடந்த 2023ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பைனலில் சபலென்காவிடம் அடைந்த தோல்விக்கு ரைபகினா பதிலடி கொடுத்துள்ளார். இது அவருக்கு முதல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டமாகும். ஒட்டுமொத்தமாக 2வது கிரான்ட்ஸ்லாம் பட்டத்தை (2022ல் விம்பிள்டன் பட்டம்) வென்றுள்ளார்.

நம்பர் ஒன் வீராங்கனை சபலென்கா ஆஸ்திரேலிய ஓபன் ராசியில்லாத தொடராக அமைந்து விட்டது. கடந்த 2025ம் ஆண்டு பைனலில் அமெரிக்காவின் மேடிசன் கீஸிடம் தோல்வியை சந்தித்து இருந்தார்.

Advertisement