மாரத்தானில் சாதிக்கும் அரண்மனை நகரத்து பெண்

மைசூரு நஞ்சன்கூடு பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷிதா, 22. பி.காம்., பட்டதாரி. இவர் தனது சிறுவயதில் சக நண்பர்களுடன் இணைந்து ஓட்டப்பந்தயங்களில் ஈடுபட்டு உள்ளார். அப்போதே, மற்றவர்களை முந்தி ஓடி உள்ளார். அப்போது, அவருக்கு தனது சிறிய பாதம் பெரிய பாதைகளில் ஓடப்போகிறது என தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவர் தன் பள்ளி, கல்லுாரி பருவங்களில் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று பல பரிசுகளை வாங்கி குவித்தார். குறிப்பாக, கல்லுாரி பருவத்தில் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றார். இதிலும் பதக்கங்களை பெற்றார்.

இவர், கடந்த ஆண்டில் மைசூரில் நடந்த இரண்டு மாரத்தான் போட்டிகள், பெங்களூரில் நடந்த 10 கி.மீ., மாரத்தான், கொல்கட்டாவில் நடந்த 25 கி.மீ., மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றார். இந்த போட்டிகளில் பங்கேற்று இலக்கை அடைவதே பெரிய விஷயம். இதை அனைத்தும் செய்து முடித்து உள்ளார். இதனால், இவரை பலரும் பாராட்டினர்.

குறிப்பாக, கடந்த மாதம் நடந்த மும்பை மாரத்தானில் 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஹர்ஷிதா பங்கேற்றார். சிறுத்தை போல ஓடினார். 42 கிலோ மீட்டர் ஓடி இலக்கை அடைந்தார். 3 மணி நேரம் 51 நிமிடங்கள் தொடர்ச்சியாக ஓடி இலக்கை அடைந்தார். இரண்டாவது இடம் அடைந்து, வெள்ளி பதக்கத்தை வென்றார்.

இது ஹர்ஷிதாவுக்கு பெயரும், புகழையும் தேடி தந்தது. மேலும், அரண்மனை நகரத்துக்கும் நற்பெயரை ஏற்படுத்தியது. இதனால், இவரை 'தங்க ஷூ அணிந்த பெண்' என்றும் பாராட்டுகின்றனர்.

இது குறித்து, ஹர்ஷிதா கூறியதாவது:



எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும், பல மாரத்தான் போட்டிகள் பங்கேற்க உள்ளேன். எனக்கு ஓட பிடிக்கும். அதுபோல, நீங்களும் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. உழைத்தால் உயர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.




- நமது நிருபர் -:

Advertisement