வங்கதேசத்தில் 12ம் தேதி பொதுத்தேர்தல்; இந்தியாவுக்கு அழைப்பு

12

டாக்கா: வங்கதேசத்தில் நடக்கும் பொதுத்தேர்தலில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

வங்கதேசத்தில் வரும் 12ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதோடு, நிர்வாக அதிகாரத்தைக் குறைப்பதற்கான பொதுவாக்கெடுப்பும் ஒரே நாளில் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 300 இடங்களுக்கு 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் மற்றும் பொதுவாக்கெடுப்பில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு வங்கதேசம் அழைப்பு விடுத்துள்ளது. ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால், வங்கதேசத்தின் மீது மத்திய அரசு பெரும் அதிருப்தியில் இருக்கிறது. எனவே, இந்தியா தனது பார்வையாளர் குழுவை அனுப்புவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

இடைக்கால அரசு வெளியிட்ட தகவலின்படி, இதுவரை மொத்தம் 330 சர்வதேசப் பார்வையாளர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளனர். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் உள்பட 6 சர்வதேச அமைப்புகள் பார்வையாளர்களை வங்கதேசத்திற்கு அனுப்ப ஒப்புக்கொண்டனர். அதேபோல, 16 நாடுகள், பல்வேறு சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 32 தனிப்பட்ட நபர்கள் என பலர் வருகை தர உள்ளனர்.

இது குறித்து வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 2024ல் நடந்த தேர்தலை விட இந்த முறை இரு மடங்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை இருக்கும்," என்று தெரிவித்துள்ளது.

Advertisement