எதிர்பார்ப்பு, ஏற்றம், ஏமாற்றம் தந்த பட்ஜெட் தொழில் துறையினரின் கருத்துகள்

வரவேற்கத்தக்கதே ஜெயப்பிரகாசம், கவுரவ ஆலோசகர், தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கம்: பெருநகரங்களை தவிர 2, 3 ம் அடுக்கில் உள்ள நகரங்களும் வளர்ச்சி அடையும் விதமாக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கியதை வரவேற்கிறோம். ரூ.10 ஆயிரம் கோடி செலவில் பயோ பார்மா சக்தி திட்டம், 'செமி கண்டக்டர்' துறையில் புதிய மேம்பாடுகள், கட்டமைப்பை ஊக்குவிக்கும் திட்டம், மின்னணு உபகரணங்கள் தொழிலை ஊக்குவிக்க ரூ.40 ஆயிரம் கோடி அறிவிப்பை வரவேற்கிறோம். கன்டெயினர் உற்பத்திக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கியதால் உள்நாட்டு, வெளிநாட்டு சரக்கு போக்குவரத்து எளிமையாகும்.

புதுமையானது ரத்தினவேல், தலைவர், அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கம்: இந்திய பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு அதிகரிப்புக்கு சுற்றுலாத் துறையை மையப் புள்ளியாக வைத்திருப்பதை பாராட்டுகிறோம். மருத்துவ சுற்றுலா சேவை மையமாக உருவாக்கும் வகையில் தனியார் துறையுடன் 5 மண்டல மருத்துவ மையங்கள் உருவாக்கத் திட்டமிட்டிருப்பது சிறப்பு. ஆசியான் நாடுகள் அமைப்புக்கு பரிந்துரை செய்த 18 சுற்றுலா நகரங்களில் ஒன்றாக விரைவில் மதுரை சேர்க்கப்பட்டு, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேயா, வியட்நாம் போன்ற 10 ஆசியான் நாடுகளுக்கு நேரடி விமான சேவை கிடைக்கும்.

தொலைநோக்கு உள்ளது குமார் , தலைவர், மதுரை மண்டல ஓட்டல்கள் சங்கம்: பட்ஜெட் அனைத்தும் உணவுத் தொழிலுக்கு தொலைநோக்கு பார்வையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பெட்ரோல், டீசல், காஸ் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் விலைவாசி குறைய வாய்ப்பு உள்ளது. உணவகங்களுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு அளிப்பது பற்றி மூச்சு விடாதது வருத்தமே. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. 2 மாதங்களில் ரூ.160 விலை உயர்வால் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வளர்ந்த பாரதத்திற்கானது தீனதயாளன், பேராசிரியர், மதுரைக் கல்லுாரி: இந்த பட்ஜெட் 2047க்கான வளர்ந்த பாரதத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்த தேசிய உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 4.3 ஆக குறைக்கப்பட்டது நல்ல அம்சம். இந்தியாவை மருந்து உற்பத்தி மையமாக உயர்த்துவதுடன், குறைந்த விலையில் மருந்து கிடைக்க வழி வகுக்கும். அதிவேக ரயில் போக்குவரத்து வழித்தடம், அரிய கனிம வழித்தடம், ஆதிச்சநல்லுார் கலாசாரம் மைய ஏற்பாடுகள் மதிப்புக்குரிய திட்டங்கள். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோரை மீட்கவும், நாட்டை 3 வது பொருளாதார வல்லரசு நாடாக மாற்ற உதவும்.

விவசாயிகளுக்கு சாதகம் இல்லை பெருமாள், தேசியத் துணைத் தலைவர், பாரதிய கிசான் சங்கம்: பணப்பயிரான தென்னை, நோய் காரணங்களால் உற்பத்தி குறைந்து வருகிறது. புதுக்கன்றுகள் நடுவதற்கான தென்னை ஊக்குவிப்பு திட்டத்தை கொண்டு வருவதை வரவேற்கிறோம். விவசாயிகளுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் இல்லாதது, விவசாயிகளுக்கு சாதகமாக பயிர் பாதுகாப்பு மறுசீரமைப்பு அறிவிப்பு இல்லாதது, கோதாவரி - காவேரி நதி நீர் பற்றிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ஏமாற்றம் தருகிறது ஜெகதீசன், தலைவர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்: வழக்கமான நிதிநிலை அறிக்கையாகத்தான் பார்க்க முடிகிறது. தமிழகத்திற்கான எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. மதுரைக்கு அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில், பாஸ்போர்ட், நைபர், மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம் போன்ற எந்தத் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றம் தருகிறது. தொழில் வணிகத் துறையினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறியதாக அமைந்துள்ளது.

ஏமாற்றமே அளிக்கிறது இளங்கோவன், முன்னாள் தலைவர், தமிழ்நாடு கிரடாய்: அரசின் தொடர் உள்கட்டமைப்பு முதலீடுகள் மீது வழங்கப்படும் கவனம், ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கமாக இருக்கும். மேலும், தொழில் செய்வதற்கான எளிமை குறித்த முக்கியத்துவம் பாராட்டத்தக்கது. எனினும், விலை குறைந்த வீட்டு வசதி தொடர்பாக பட்ஜெட்டில் தெளிவான நடவடிக்கை இல்லாதது ஏமாற்றமே. கட்டுமானச் செலவுகளும் நில விலையும் உயர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ற கொள்கை ஆதரவு இல்லாதது, கட்டுமான நிறுவனங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

வருமான வரி குறைப்பில்லை வாசுதேவன், தலைவர், டான்ஸ்டியா : மத்திய பட்ஜெட்டை வரவேற்கிறோம். கட்டமைப்பு முதலீடாக ரூ.12.2 லட்சம் கோடி என்பது சிறு, குறுந்தொழில்களுக்கு ஆர்டர்களை அதிகரிக்க உதவும். ​தொழில்சார் பூங்காக்கள், மெகா ஜவுளிப் பூங்காக்கள் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. குறு, சிறு தொழில் வருமான வரி விகிதங்களைக் குறைக்கும் அறிவிப்பு இல்லாதது ஏமாற்ற மளிக்கிறது. ​நவீனமயமாக்க ஊக்கத்தொகை, சிறு, குறுந்தொழில்கள் புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்துதல், விரிவாக்கம் இடம்பெறாததால், தொழில்துறை 4.0-க்கு மாறுவதை கடினமாக்கும்.

நீடித்த வளர்ச்சிக்கு உதவும் முத்துராஜா, முன்னாள் பேராசிரியர், அமெரிக்கன் கல்லுாரி: நீடித்த வளர்ச்சிக்கு உதவும் மருத்துவத்துறை, தொழில் நுண்ணறிவு துறை, அறிவுசார் திறன் மேம்பாடு, பெண்கள், இளைஞர்களுக்கான திட்டங்கள், எல்லா மாவட்டங்களிலும் உழைக்கும் பெண்கள் விடுதி அறிவிப்பு பாராட்டத்தக்கது. கம்ப்யூட்டர் தகவல் திறன் சார்ந்த அந்நிய நிறுவனங்களுக்கு வரிச்சலுகை, விலக்கு வளர்ச்சிக்கு துணை புரியும். வேளாண் பயிர்களுக்கு முன்னுரிமை, பெண் தொழில் முனைவோர் போன்ற அறிவிப்புகளும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் தரும்.

உற்பத்தித்துறைக்கு முக்கியத்துவம் தினேஷ், தலைவர், சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர்: செமி கண்டக்டர் உற்பத்திக்கு ரூ. 40 ஆயிரம் கோடி, குறு நிறுவனங்கள் மேம்பாட்டிற்கு ரூ. 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு என உற்பத்தித் துறைளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஜவுளித் துறையை வலுப்படுத்த, புதிய இயந்திரங்களை மாற்ற நிதி ஒதுக்கீடுகள், சமர்த் திட்டத்தில் டெக்ஸ்டைல் 2.0 என்று கொண்டுவந்துள்ளது ஜவுளித்துறையை புரட்சிகரமாக மாற்றும். பொதிகை மலையில் சுற்றுலா தலம், அமைப்பதை வரவேற்கிறோம். தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

முதியோருக்கு சலுகையில்லை பத்மநாதன், பொதுச் செயலாளர், தென்னக ரயில் பயணிகள் சங்கம்: இந்தியாவின் கிழக்கு, மேற்குப் பகுதிகளை இணைக்கும் வகையில் பிரத்யேக சரக்கு ரயில் பாதை, சென்னை-- பெங்களூரு ---- ஹைதராபாத் அதிவேக ரயில் பாதை போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கது. புதிய எக்ஸ்பிரஸ் வண்டிகள் இயக்கம் பற்றிய அறிவிப்பு இடம் பெறவில்லை. மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அறிவிப்பும் இடம் பெறாதது பயணிகளுக்கு ஏமாற்றமே. மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி திட்டம் வரவேற்கத்தக்கது.

வரவேற்கத்தக்க பட்ஜெட் செந்திகுமார், தலைவர், மடீட்சியா: குறுந்தொழில் வளர்ச்சிக்கு மூலதனம் எளிதாக கிடைக்க 'ரிஸ்க் கேபிடல்' நிதி ரூ.2000 கோடி, 'திரட்ஸ்' திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் என அறிவிப்பால், பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு விற்பனை தொகை விரைவில் கிடைக்கும். சோலார் எனர்ஜி, ஆற்றல் இயந்திரங்களுக்கு குறைந்த வட்டியில் பசுமைக் கடன், சிறு, குறுந் தொழில்களின் வளர்ச்சியை உறுதி செய்ய சாம்பியன் எம்.எஸ்.எம்.இ., திட்டம் மூலம் சிறு தொழில் நிறுவன வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை, தூத்துக்குடி தொழில்வழித்தட அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லை என்.ஜே.போஸ்: ராமேஸ்வரம் தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க மாநில பொதுச்செயலாளர்: மத்திய பட்ஜெட்டில் பெரிய பணக்காரர்கள் பயன்பெறும் வகையில் அறிவிப்புகள் உள்ளன. ஆழ்கடலில் மீன்பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் பயனடையும் வகையில் இந்திய மீன்பிடிப் படகால் பிடிக்கப்படும் மீன்களுக்கு சுங்கவரி விலக்கு அறித்துள்ளதை வரவேற்கிறோம். ஆண்டுதோறும் நாட்டுப்படகு, விசைப்படகு மூலம் ரூ.60 ஆயிரம் கோடிக்கும் மேல் அந்நிய செலவாணி ஈட்டித் தருகிறோம். இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்படும் படகுகள், கைதாகும் மீனவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் எந்த அறிவிப்பும் இல்லை. படகுகளை இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு மாநில அரசு மட்டுமே உதவித்தொகை வழங்குகிறது. வரி இல்லாமல் டீசலுக்கு முழு மானியம் வழங்க வேண்டும். படகுகளை இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் நிறைவேறும் என எதிர்பார்த்தோம். எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை தந்துள்ளது.

அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் ஏ.முத்துப்பாண்டியன், சிவகங்கை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு அமல்படுத்தவுள்ள நிலையில் மாதச் சம்பளம் பெறும் அரசு ஊழியர்களின் தனிநபர் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும். பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியில் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம். அதுபோன்ற மாற்றம் இல்லை என தெரிவித்ததால் மாதச்சம்பளம் பெறும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஏமாற்றப்பட்டனர். தமிழக கல்வித்துறைக்கு நிலுவைத்தொகை விடுவிப்பது குறித்தும் அறிவிப்பு இல்லை. தமிழகத்திற்கென பெரிய திட்டங்கள் எதுவும் இடம் பெறவில்லை.

Advertisement