அல்காரஸ் புதிய சாம்பியன்: ஆஸி., ஓபன் டென்னிசில் அசத்தல்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயினின் அல்காரஸ். பைனலில், 2-6, 6-2, 6-3, 7-5 என செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.
மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-1' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 22, உலகின் 'நம்பர்-4' வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 38, மோதினர். முதல் செட்டை ஜோகோவிச் 6-2 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட அல்காரஸ், அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அசத்திய அல்காரஸ், 4வது செட்டை 7-5 என போராடி வென்றார்.
முதல் பட்டம்: மூன்று மணி நேரம், 2 நிமிடம் நீடித்த பைனலில் அபாரமாக ஆடிய அல்காரஸ் 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய ஓபனில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இளம் வீரர்: இது, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் அல்காரஸ் வென்ற 7வது பட்டம். ஏற்கனவே பிரெஞ்ச் ஓபன் (2024, 2025), விம்பிள்டன் (2023, 2024), யு.எஸ்., ஓபனில் (2022, 2025) தலா 2 முறை கோப்பை வென்றிருந்தார். இதன்மூலம் 'கேரியர் கிராண்ட்ஸ்லாம்' (நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் குறைந்தபட்சம் ஒரு பட்டம்) கைப்பற்றிய இளம் வீரரானார் (22 ஆண்டு, 272 நாள்) அல்காரஸ். இதற்கு முன், அமெரிக்காவின் டான் பட்ஜ் (1938, பிரெஞ்ச் ஓபன், 22 ஆண்டு, 363 நாள்) இச்சாதனை படைத்திருந்தார்.
தவிர, 'கேரியர் கிராண்ட்ஸ்லாம்' கைப்பற்றிய 9வது வீரரானார் அல்காரஸ். ஏற்கனவே சுவிட்சர்லாந்தின் பெடரர், ஸ்பெயினின் நடால், செர்பியாவின் ஜோகோவிச் உள்ளிட்டோர் இந்த இலக்கை அடைந்திருந்தனர். ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவில், 7 கிராண்ட்ஸ்லாம், 8 மாஸ்டர்ஸ் உட்பட தனது 25வது பட்டத்தை கைப்பற்றினார் அல்காரஸ்.
தொடரும் சோகம்: பைனலில் ஏமாற்றிய ஜோகோவிச், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 25வது பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். கடைசியாக 2023ல் யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்ற ஜோகோவிச், அதன்பின் தொடர்ச்சியாக 9 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் (2 பைனல், 5 அரையிறுதி, ஒரு காலிறுதி, ஒரு 3வது சுற்று) சோபிக்கவில்லை.
ரூ. 38 கோடி பரிசு
ஸ்பெயினின் அல்காரஸ், கோப்பையுடன் ரூ. 38.05 கோடி பரிசு வென்றார். இரண்டாவது இடம் பிடித்த செர்பியாவின் ஜோகோவிச், ரூ. 19.71 கோடி பரிசுத்தொகை பெற்றார்.
நடால் வருகை
ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலை நேரில் காண, 'களிமண் கள நாயகன்' ஸ்பெயினின் ரபெல் நடால் 39, வந்தார். பரிசளிப்பு நிகழ்ச்சியில் நடாலை பற்றி ஜோகோவிச் பேசிய போது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
மேலும்
-
இந்தியாவை இழிவுபடுத்த வேண்டாம் ; ராகுலை எச்சரிக்கும் கிரண் ரிஜிஜூ
-
எதிர்பார்ப்பு, ஏற்றம், ஏமாற்றம் தந்த பட்ஜெட் தொழில் துறையினரின் கருத்துகள்
-
ஜெயில் டூ பெயில்; பெயில் டூ ஜெயில் தி.மு.க., கூட்டணியை விமர்சித்த சுதாகர்ரெட்டி
-
மதுரை விமான நிலையத்தில் ஓட்டமெடுத்த திருமாவளவன்
-
அ.தி.மு.க., விமர்சனத்தை கடந்து போவோம்: அரசியல் எதிரி தி.மு.க.,வை வீழ்த்துவோம்: த.வெ.க., அருண்ராஜ் பேட்டி
-
திருப்பரங்குன்றம் தைப்பூச விழாவில் பக்தர்கள் வெள்ளம் பழநி ஆண்டவருக்கு பாலாபிஷேகம்