அ.தி.மு.க., விமர்சனத்தை கடந்து போவோம்: அரசியல் எதிரி தி.மு.க.,வை வீழ்த்துவோம்: த.வெ.க., அருண்ராஜ் பேட்டி

1

மதுரை: அ.தி.மு.க., விமர்சனத்தை கடந்து போகிறோம்; எங்கள் அரசியல் எதிரியான தி.மு.க.,வை வரும் தேர்தலில் வீழ்த்துவோம் என த.வெ.க., கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: த.வெ.க., மீதான அ.தி.மு.க.,வின் விமர்சனங்களை கடந்து போகிறோம். தி.மு.க.,வின் மக்கள் விரோத செயல்களை எடுத்துக்கூறுவோம். அவர்கள் எங்கள் அரசியல் எதிரி. வரும் தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்துவோம். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு, விஜயை முதல்வராக ஏற்கும் கட்சி எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. காங்., - த.வெ.க. கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விஜய் தான் முடிவு செய்ய முடியும்.

'அ.தி.மு.க., ஊழல் கட்சி என்றால் அதில் இருந்து முன்னாள் அமைச்சர்களை ஏன் சேர்க்க வேண்டும்' என பேசிய தினகரனின் பின்னணி குறித்து நாங்கள் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 'என்னுடன் உள்ளவர்களை ஊழல் செய்ய விடமாட்டேன்' என விஜய் தெரிவித்துள்ளார். கண்டிப்பாக அவ்வாறு நடப்பார்.

தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என மக்கள் ஏங்கிக்கொண்டுள்ளனர். தற்போது மக்களிடம் பெறும் தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கோரிக்கை மனுக்களை, தி.மு.க.,வை போல் நாங்கள் கிடப்பில் போட்டுவிட மாட்டோம். சட்டசபை தேர்தலில் ஜனநாயக புரட்சி ஏற்படும். மக்கள் ஆதரவுடன் த.வெ.க., ஆட்சி அமைக்கும்.

முதல்வர் ஸ்டாலின் உண்மையான பத்திரிகையாளர்களை எப்போது சந்திக்கிறோரோ அதற்கு அடுத்த நாள் விஜயும் பத்திரிகையாளரை சந்திப்பார். தேர்தல் வெற்றி குறித்து கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பு நடக்கிறது. தி.மு.க.,வுக்கு மக்கள் பலம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement