சூர்யாவின் 'சூப்பர்' கூட்டணி: உலகை வெல்ல இந்தியா 'ரெடி'

திருவனந்தபுரம்: சூர்யகுமார் தலைமையில் வலுவான இந்திய அணி உருவாகியுள்ளது. ரன் குவிக்க அபிஷேக் சர்மா, இஷான் கிஷான் உள்ளனர். விக்கெட் வேட்டைக்கு பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி இருப்பதால், 'டி-20' உலக கோப்பையை தக்க வைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான 'டி-20 தொடரை 4-1 என வென்றது. இதில், திருவனந்தபுரத்தில் நடந்த ஐந்தாவது போட்டியில் இஷான் கிஷான் 42 பந்தில் சதம் விளாசினார்.


முந்தும் இஷான்: வரும் 7ம் தேதி துவங்கும் 'டி-20' உலக கோப்பைக்கான இந்திய அணியில் 2வது கீப்பராக தான் இஷான் வாய்ப்பு பெற்றார். திலக் வர்மாவுக்கு காயம் ஏற்பட, நியூசிலாந்து தொடரிலும் இடம் கிடைத்தது. இதை கெட்டியாக பிடித்துக் கொண்ட இஷான், 4 போட்டியில் 215 ரன் (ஸ்டிரைக் ரேட் 231.18) விளாசினார். முதன்மை கீப்பர்-பேட்டராக தேர்வான சாம்சன் (5 போட்டி, 46 ரன்) தொடர்ந்து சொதப்ப, உலக கோப்பை தொடரின் விளையாடும் 'லெவனில்' இடம் பிடிப்பதில் இஷான் முந்துகிறார்.

மிரட்டல் ஆட்டம்: கேப்டன் சூர்யகுமார், 2025ல் 21 போட்டியில் 218 ரன் (சராசரி 13.62, ஸ்டிரைக் ரேட் 123.16) மட்டும் எடுத்து தவித்தார். நியூசிலாந்து தொடரில் இழந்த 'பார்மை' மீட்ட இவர், 'மிஸ்டர் 360 டிகிரி' வீரராக மிரட்டினார். 5 போட்டியில் 242 ரன் (சராசரி 80.66, ஸ்டிரைக் ரேட் 196.74) விளாசினார். இதே போல அபிஷேக் சர்மா (5 போட்டி, 182 ரன், ஸ்டிரைக் ரேட் 249.31) நல்ல துவக்கம் தந்தார். 'டாப்-ஆர்டர்' ரன் குவிப்பதால், கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங் 'ரிலாக்சாக' விளையாடுகின்றனர். இதனால் தான் ஐந்தாவது போட்டியில் இந்தியா 20 ஓவரில் 271/5 ரன் எடுக்க முடிந்தது.


பந்துவீச்சில் 'யார்க்கர்' பும்ரா, நியூசிலாந்துக்கு எதிரான 5வது போட்டியில் 5 விக்கெட் சாய்த்த அர்ஷ்தீப் சிங் பலம் சேர்க்கின்றனர். 'சுழலில்' அசத்த வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். 'டி-20' உலக கோப்பையை மீண்டும் வெல்வதற்கு ஏற்ப தரமான இந்திய அணியாக காணப்படுகிறது.

துணிச்சல் முக்கியம்: கேப்டன் சூர்யகுமார் கூறுகையில்,''சொந்த மண்ணில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடப்பதால், நெருக்கடி அதிகம். இத்தகைய 'திரில்' அனுபவம் இல்லாவிட்டால், விளையாட்டில் சுவராஸ்யம் இருக்காது. இந்திய அணி பலமாக உள்ளது. 7 பேட்டர், ஒரு ஆல்-ரவுண்டர், தரமான பவுலர்கள் உள்ளனர். ஒவ்வொரு பேட்டருக்கும் தனித்திறமை உண்டு. நியூசிலாந்து தொடரில் 3வது வீரராக களமிறங்கி அசத்தினார் இஷான். ஆடுகளத்திற்கு ஏற்ப அனைவரும் துணிச்சலாக விளையாட வேண்டும். பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் சேர்ந்து 16 ஓவர் வீசுவர். ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே தலா 2 ஓவர் வீசுவர். தேவைப்பட்டால் அபிஷேக் பந்துவீசுவார்.


யாருக்கு வாய்ப்பு: திலக் வர்மா (அடிவயிறு காயம்) விளையாடுவது உறுதியில்லாமல் உள்ளது. பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர் அணிக்கு திரும்பும் போது, விளையாடும் 'லெவனை' முடிவு செய்வதில் குழப்பம் ஏற்படும். துவக்க வீரர் இடத்திற்கு இஷான் கிஷான், சாம்சன் இடையே போட்டி நிலவுகிறது. யாருக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றி அமெரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை போட்டிக்கு (பிப். 7, மும்பை வான்கடே மைதானம்) முன்பு தெரிவிக்கப்படும்,''என்றார்.


ஓய்வு செய்த மாயம்
கேப்டன் சூர்யகுமார் கூறுகையில்,''கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 4 'டி-20' போட்டிகளில் 34 ரன் தான் எடுத்தேன். இத்தொடர் முடிந்ததும் வீட்டிற்கு திரும்பினேன். எனது பேட் அடங்கிய 'கிட் பேக்'கை ஓரமாக வைத்தேன். 9-10 நாள் முழு ஓய்வு எடுத்தேன். புத்தாண்டு பிறந்ததும் பயிற்சியை துவக்கினேன். எனது தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சித்தேன். 2021-23ல் களமிறங்கிய வேகத்தில் அதிரடியாக ஆடுவேன். இப்போது 5-7 பந்துகள் கவனமாக ஆடிவிட்டு, பின் விளாச துவங்குகிறேன். இந்த அணுகுமுறை நியூசிலாந்து தொடரில் கைகொடுக்க, இழந்த 'பார்மை' மீட்டேன்,''என்றார்.


கவாஸ்கர் கணிப்பு

இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதும் லீக் போட்டி பிப். 7ல் மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய 'லெவன்' அணியை, முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். இதில், விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை.


'லெவன்' அணி: அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், திலக் வர்மா, ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.


பயிற்சி ஆட்டம்

'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள் இன்று முதல் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றன. நவி மும்பையில் இன்று நடக்கும் போட்டியில் இந்தியா 'ஏ' அணி, அமெரிக்காவை சந்திக்கிறது. மற்ற போட்டிகளில் ஆப்கானிஸ்தான் - ஸ்காட்லாந்து (பெங்களூரு), கனடா - இத்தாலி (சென்னை) அணிகள் பங்கேற்கின்றன.
வரும் பிப். 4ல் நவி மும்பையில் நடக்கும் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. பின், பிப். 6ல் பெங்களூருவில் நடக்கும் போட்டியில் இந்தியா 'ஏ' அணி, நமீபியாவை சந்திக்கிறது.

Advertisement