பொருளாதார பலத்தில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா - சீனா: எலான் மஸ்க்

2

வாஷிங்டன்: உலகளாவிய உள்நாட்டு உற்பத்தியில் டாப் 10 நாடுகளின் பங்குகள் குறித்த புள்ளிவிபரத்தை வெளியிட்ட தொழிலதிபர் எலான் மஸ்க், உலகின் பொருளாதார பலம் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா - சீனாவை நோக்கி மாறுவதாக தெரிவித்துள்ளார்.


உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர், 'டெஸ்லா' மற்றும், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவன அதிபர் எலான் மஸ்க். 'எக்ஸ்' சமூக வலை தளத்தையும் சில ஆண்டுகளுக்கு முன் இவர் கையகப்படுத்தினார்.


அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட இவர், அமெரிக்க அரசின் செலவுகளை குறைக்க உருவாக்கப்பட்ட சிறந்த நிர்வாகத்துக்கான துறையின் தலைவராக சில மாதங்கள் பணியாற்றினார். பின் அமைச்சர்கள் உடனான கருத்து வேறு பாட்டால் அப்பதவியை ராஜினாமா செய்தார்.


அத் பின் டிரம்ப் நிர்வாகத்தை அவ்வப்போது விமர்சித்து வருகிறார். இந்நிலையில், தன் சமூக வலைதள பக்கத்தில் உலகளாவிய உள்நாட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள் பட்டியலை அவர் பகிர்ந்து உள்ளார்.


ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட அப்பட்டியலில் 26.6 சதவீத ஜி.டி.பி.,யுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 17 சதவீத ஜி.டி.பி.,யுடன் இந்தியா இரண்டாம் இடத்திலும், 9.9 சதவீத ஜி.டி.பி.,யுடன் அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் உள்ளன.


மேலும் இப்பட்டியலில் இந்தோனேஷியா, துருக்கி, நைஜீரியா, பிரேசில், வியட்நாம், சவுதி அரேபியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.


இது குறித்து எலான் மஸ்க், 'உலக பொருளாதார பலம் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா - சீனா நோக்கி மாறுகிறது' என கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement