உத்தர பிரதேசத்தின் திரிவேணி சங்கமத்தில் 2.10 கோடி பக்தர்கள் புனித நீராடினர்

பிரயாக்ராஜ்: கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மகர பவுர்ணமியையொட்டி, உத்தர பிரதேசத்தின் திரிவேணி சங்கமத்தில், 2.10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர்.


உ.பி.,யின் பிரயாக்ராஜில், மகர மேளா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மகர பவுர்ணமி எனப்படும் தை பவுர்ணமி நாளான நேற்று, முக்கிய நிகழ்வான புனித நீராடல் விழா வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி, நாடு முழுதும் இருந்து அதிகாலை முதலே திரளான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்தனர்.


மாலை 6:00 மணி வரை, நேற்று ஒரே நாளில் 2.10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். காலை நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவியபோதும், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் நேற்று புனித நீராடினர்.


இதுகுறித்து பிரயாக்ராஜ் கலெக்டர் மணீஷ் குமார் வர்மா கூறியதாவது: மகர மேளாவில் கல்பவாசம் அனுசரித்து வரும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரு மாத கால விரதத்தை, மகர பவுர்ணமி நீராடலுடன் நிறைவு செய்வர். அனைத்து படித்துறைகளிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இதற்காக, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முழு மேளா பகுதியையும் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். வரும் 15ம் தேதி மஹா சிவராத்திரியன்று மேற்கொள்ளப்படும் நீராடல் திருவிழாவுடன் மகர மேளா நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement