ஏற்றுமதி துறைக்கு என்ன பயன்?

அமெரிக்க வரி அழுத்தங்கள் அதிகரித்துள்ள சூழலில், ஏற்றுமதி துறைக்கு இந்த பட்ஜெட்டால் என்னென்ன பயன் கிடைக்கும் என்பது குறித்து, இந்திய ஏற்றுமதி அமைப்புகள் கூட்டமைப்பின் இணை இயக்குநர் (பொது) கே.உன்னிகிருஷ்ணன் கூறிய முக்கியமான அம்சங்கள்:

 ஜவுளி, வே ளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு, தோல் பொருட் கள் போன்ற துறைகளுக்கு அரசு வழங்கியுள்ள ஆதரவு, தென்னிந்திய மாநிலங்களுக்கு பெரிய பயனை தரும். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள ஏற்றுமதி தொழிற்சாலைகளில் பணிபுரியும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இது வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

 பட்டு, கம்பளி, ஜூட் போன்ற இயற்கை நார்கள், செயற்கை நார்கள் மற்றும் புதிய வகை நார்களில் தன்னிறைவை அடைய 'தேசிய நார் திட்டம்' உதவும். இதனால் தேவையான மூலப்பொரு ட்கள் நாட்டுக்குள்ளேயே கிடைக்கும்; இறக்குமதி சார்பு குறையும்.

 பாரம்பரிய ஜவுளி மையங்களில் இயந்திரங்களை புதுப்பித்தல், புதி ய தொழில்நுட்பங்களை கொண்டு வருதல், தர சோதனை மற்றும் சான்றிதழ் மையங்களை அமைத்தல் போன்றவற்றுக்கு அரசு முதலீடு செய்யும். இதனால் உற்பத்தி திறனும், வேலைவாய்ப்பும் ஒரே நேரத்தில் உயரும்.

 தேசிய கைநுால் மற்றும் கைவினை திட்டம் வாயிலாக நெசவாளர்கள், கைவினைஞர்களுக்கு ஒருங்கிணைந்த ஆதரவு வழங்கப் படும். இது பாரம்பரிய கலைகளை பாதுகாப்பதோடு, அவற்றுக்கான சந்தை வாய்ப்புகளையும் அதிகரிக்கும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற முறையில், உலக தரத்திற்கு இணங்க, ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியை ஊக்குவிக்க 'டெக்ஸ் - இக்கோ' திட்டம் செயல்படும்.

 'சமர்த் 2.0' திட்டம் வாயிலாக, தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து ஜவுளி துறைக்கான திறன் பயிற்சிகள் வழங்கப்படும். மெகா ஜவுளிப் பூங்காக்கள் மூலம் முதலீடுகள் அதிகரித்து, ஜவுளி துறையின் மதிப்புக் கூட்டல் மேம்படும்.

 ஜவுளி, தோல் போன்ற இறுதிப் பொருட்களை ஏற்றுமதி செய்து, வருவாய் பெற வேண்டிய காலக்கெடு, ஆறு மாதங்களில் இருந்து ஒரு ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்களின் நடைமுறை சுமை குறையும்.

 கடல் உணவு ஏற்றுமதிக்காக பயன்படுத்தப்படும் சில மூலப்பொருட்களின் வரிவிலக்கு இறக்குமதி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இது கடல் உணவு ஏற்றுமதியாளர்களுக்கு செலவைக் குறைக்கும்.

 பிரத்யேக பொருளாதார மண்டலங்கள், உயர் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் தொடர்பான நீண்டநாள் கோரிக்கை களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மொத்தத்தில், இந்த மத்திய பட்ஜெட் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் உள்ள ஜவுளி, தோல் மற்றும் வேளாண்மை சார்ந்த ஏற்றுமதி துறைகளுக்கு முக்கியமான ஊக்கமாக அமையும். வேலை வாய்ப்பையும், ஏற்றுமதியையும் ஒரே நேரத்தில் வளர்க்கும்.

Advertisement