திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு: வருத்தம் தெரிவித்த கலெக்டர், போலீஸ் கமிஷனர்

22


மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர் , கோவில் கமிஷனர் ஆகியோர் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தனர்.


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும் அமல்படுத்தாமல் தி.மு.க., அரசு பிடிவாதம் காட்டியது. இதனால், ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார், மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இது ஐகோர் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மதுரை கலெக்டர் பிரவின் குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் நாராயணன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.


அப்போது, 'சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை . நிபந்தனையற்ற வகையில் வருத்தம் தெரிவிக்கப்படுகிறது என கலெக்டர் ,போலீஸ் கமிஷனர் ,கோயில் செயல் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக்கூடாது என்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. 1500 பேர் மலையேற முயன்றனர் கட்டுப்படுத்தும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. நீதிபதி கோரும் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவும் தயார். 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால் மோசமான விளைவுகள் ஏற்பட்டு இருக்கும். பொது மக்கள், பக்தர்களை பாதுகாக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதிகாரிகள் ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என்றார்.
நீதிபதி கூறுகையில், மலையேற அனுமதிக்க முடியாது. வரும் பிரச்னையை எதிர்கொள்ள தயார் என போலீஸ் கமிஷனர் கூறினாரா? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக அதிகாரிகள் புன்னகையுடன் வந்துள்ளனர் என்றார்.


நீதிபதி, போலீஸ் கமிஷனர் ,போலீஸ் துணை கமிஷனர், கோயில் செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கலெக்டர் மட்டும் மார்ச் 2 ல் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement