லோக் சபாவில் ராகுல் சர்ச்சை பேச்சின் மையமான நரவானே யார்; ஒரு ப்ளாஷ்பேக் அலசல்

7

புதுடில்லி: முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய புத்தகத்தை ராகுல் மேற்கோள் காட்டி பேசியதை தொடர்ந்து, யார் இந்த நரவானே என்ற விவாதம் வலுத்துள்ளது.

அவரை பற்றிய ஒரு சிறு ப்ளாஷ்பேக்:

1960ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் பிறந்தவர் எம்.எம்.நரவானே. முழு பெயர் மனோஜ் முகுந்த் நரவானே. இவரின் தந்தை இந்திய விமானப்படையில் பணியாற்றியவர். தாயார் அகில இந்திய வானொலி நிலையத்தில் பணிபுரிந்தவர். புனேவில் தம் பள்ளி படிப்பை முடித்த நரவானே, முதுகலை படிப்பை சென்னை பல்கலை.யில் முடித்தவர்.

அதன் பிறகு குன்னூர் வெலிங்டனில் இருக்கும் ராணுவ பயிற்சி கல்லூரியில் சேர்ந்து படித்தார். பாதுகாப்பு துறையில் முனைவர் பட்டம் முடித்தார். இந்திய ராணுவத்தில் இவர் சேர்ந்தது 1980ம் ஆண்டு ஆகும். முதலில் சீக்கிய காலாட் படையில் பணியாற்றினார். ராணுவத்தில் இவரின் சேவை கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகும்.

வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் சிறப்பாக பணியாற்றியவர். இந்தியா-சீனா எல்லையிலும் பணியாற்றிய பெருமை பெற்றவர். ராஷ்டிரிய ரைபிள்ஸ் பட்டாலியனை வழிநடத்தி, அசாம் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் சேவையாற்றியவர். இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதி காக்கும் படையிலும் இவர் இடம்பெற்றவர்.

2019ம் ஆண்டு நாட்டின் ராணுவ தளபதியாக பதவியேற்றார். பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகளுடன் பல்வேறு பேச்சு நடத்தியவர் நரவானே. இந்திய ராணுவத்தை மேம்படுத்தி. அதை நவீனப்படுத்தியதில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. பதவிக்காலம் 2022ம் ஆண்டு முடிய, நரவானே ஓய்வு பெற்றார்.

நரவானே புத்தகத்தில் உள்ளது என்ன?





இவர் எழுதியதாக கூறப்படும் புத்தகத்தின்(சுயசரிதை) பெயர் போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி(Four stars of Destiny-தமிழில் விதியின் 4 நட்சத்திரங்கள் என்று பொருள்). இந்த புத்தகம் இன்னமும் வெளியிடப்படவில்லை. இந்த புத்தகத்தின் ஒரு சில பகுதிகள் 2023ம் ஆண்டு ஒரு செய்தி நிறுவனம் மற்றும் பல ஊடகங்களால் வெளியிடப்பட்டன.

புத்தகத்தில் 2020ம் ஆண்டு மே 5ம் தேதி பாங்காங் ஏரி பகுதியில் இந்திய மற்றும் சீன வீரர்கள் இடையே நிகழ்ந்த வன்முறை மோதல் ஆகிய சம்பவங்களை தொடர்ந்து கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம் வெடித்தது. இந்த மோதல் குறித்து தான் நரவானே அந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்த புத்தகம் பற்றிய ஒரு கட்டுரை தான் பிரபல பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது. அந்த பத்திரிகையின் அச்சுப் பிரதியை மையமாக கொண்டே ராகுல், லோக்சபாவில் பேச முயன்றார்.

அவரின் இந்த செய்கையை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடுமையான வாத பிரதிவாதங்களை முன்வைத்தனர்.

Advertisement