தங்கம் விலை சரிவும் பெடரல் ரிசர்வ் கவர்னர் நியமனமும்!

5


- நமது சிறப்பு நிருபர்-

அதிகரித்துக் கொண்டே சென்ற தங்கம் விலை, சரிவை நோக்கி திரும்பியதற்கு முக்கிய காரணம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் நியமனம் தான் என்கின்றனர், சந்தை ஆய்வாளர்கள்.


தங்கத்தின் விலை தினம் தினம் புதுப்புது உச்சத்தை தொட்டுக் கொண்டே சென்றது. ஜனவரி 29ம் தேதி ஒரு பவுன் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாயை தொட்டது. ஆனால், மறுநாளில் இருந்து தங்கம் விலை சரியத் தொடங்கியது. நான்கு நாட்களாக தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கிறது.

காரணம் இதுதான்


விலை சரிவுக்கு முக்கிய காரணம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பின் ( இந்திய ரிசர்வ் வங்கி போன்றது) தலைவராக கெவின் வார்ஷை நியமிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளது தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பாவலுக்கும், டிரம்புக்கும் ஏழாம் பொருத்தம். டிரம்ப் சொல்வது எதையும் அவர் கேட்பதில்லை. அதனால் அவரது பணக் கொள்கைகளை டிரம்ப் தொடர்ந்து குறை கூறி வந்தார். டாலர் மதிப்பு வீழ்ச்சி, பண வீக்கம் பற்றி தொடர்ந்து குற்றம் கூறிக் கொண்டே இருந்தாலும், பாவல் அவற்றை கண்டுகொள்ளவில்லை. அதை சந்தையின்போக்கில் விட்டு விட்டார்.


இதையடுத்து புதிய பெடரல் ரிசர்வ் தலைவரை நியமிக்க டிரம்ப் முடிவு செய்தார். பொருளாதார நிபுணர்களில் அலசி ஆராய்ந்து, கெவின் வார்ஷ் என்பவரை நியமித்துள்ளார். இவர், டாலர் மதிப்பை உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்ற கொள்கையை தீவிரமாக கொண்டவர்.

இவர் தலைவராக பொறுப்பேற்கும் பட்சத்தில், டாலர் மதிப்பை உயர்த்துவார் என்ற எண்ணம் அமெரிக்க சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டது. இதனால், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்திருந்த பலரும், அவற்றை விற்பனை செய்து விட்டு டாலரில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர்.

இதனால் ஜனவரி 29 அன்று அமெரிக்க பங்குச்சந்தைகள் திறந்தபோது டாலரின் மதிப்பு உயர்வை சந்தித்தது. தங்கம் விலை சரியத்துவங்கியது. ஒரே நிமிடத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 18 ஆயிரம் ரூபாய் சரிவை சந்தித்தது. அடுத்தடுத்த நாட்களிலும் தங்கம் விலை சரிந்து வருகிறது.

இன்று பிப்.,2ம் தேதி காலை நிலவரப்படி 22 காரட் தங்கம் ஒரு பவுன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாயாக உள்ளது. அதாவது, 4 நாட்களில் 22 ஆயிரத்து 800 ரூபாய் விலை சரிந்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் மாற இருக்கிறார் என்ற தகவல் தான், தங்கம் விலையில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர், சந்தை ஆய்வாளர்கள்.

Advertisement